அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.84.40 ஆக வரலாறு காணாத சரிவு!
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.84.40 ஆக வரலாறு காணாத சரிவு!
ADDED : நவ 13, 2024 11:00 AM

புதுடில்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.84.40 என்ற அளவில் வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது.
சர்வதேச அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு நேற்று 1 பைசா குறைந்து, வரலாற்றில் இல்லாத அளவுக்கு 84.39 ரூபாயாக வீழ்ச்சி கண்டது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றியை தொடர்ந்து, டாலரின் மதிப்பு, பிற நாட்டு கரன்சிகளின் மதிப்புக்கு எதிராக தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, எப்போதும் இல்லாத அளவிற்கு இன்று (நவ.,13) ரூ.84.40ஆக சரிந்துள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பின் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைவது, முதலீட்டாளர்கள் மத்தியில் மேலும் கவலையை அதிகரித்து உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், குறுகிய காலத்தில் ரூபாய் மதிப்பு 84.50 - 84.80 வரை செல்லக்கூடுமென, சந்தை நிபுணர்கள் கணித்து உள்ளனர். அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித குறைப்பு முடிவே இதற்கு காரணம் என அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
தொடர் வீழ்ச்சியைத் தடுக்க, ரிசர்வ் வங்கி தனது அன்னிய செலாவணி கையிருப்பிலிருந்து, டாலரை விற்பது எனும் ஆயுதத்தை கையில் எடுக்க வேண்டுமென, முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இருப்பினும், வரவிருக்கும் அமெரிக்க பொருளாதார தரவுகள் மற்றும் உலகளாவிய சந்தைகளின் போக்கு ஆகியவை, இந்திய ரூபாயின் பாதையை தீர்மானிக்கும் என்பதால், அதனை முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

