சக்ரவர்த்தி சூலிபெலே மீதான வழக்கு ரத்து செய்தது கர்நாடக உயர்நீதிமன்றம்
சக்ரவர்த்தி சூலிபெலே மீதான வழக்கு ரத்து செய்தது கர்நாடக உயர்நீதிமன்றம்
ADDED : பிப் 28, 2024 06:17 AM

பெங்களூரு : பா.ஜ.,வின் பிரவீன் நெட்டாரு கொலையை கண்டித்து, பெங்களூரு டவுன் ஹால் முன் போராட்டம் நடத்திய 'இளைஞர் படை' தலைவர் சக்ரவரத்தி சூலிபெலே மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை, கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
கடந்த 2022 ஜூன் 28ம் தேதி பா.ஜ.,வின் பிரவீன் நெட்டாரு கொலையை கண்டித்து ஹிந்து ஹித்ரக்ஷா சமிதி, இளைஞர் படை உட்பட பல்வேறு ஹிந்து அமைப்பினர், பெங்களூரு டவுன் ஹால் முன் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தின்போது, 'பி.எப்.ஐ., - எஸ்.டி.பி.ஐ., போன்ற அமைப்புகளை தடை செய்ய வேண்டும்' என கோஷம் எழுப்பினர்.
இது தொடர்பாக, எஸ்.ஜே., பார்க் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சதீஷ், பெங்களூரு ஆறாவது ஏ.சி.எம்.எம்., நீதிமன்றத்தில், பா.ஜ., - எம்.எல்.ஏ., ரவிசுப்ரமண்யா, முன்னாள் மேயர்கள் கட்டே சத்யநாராயணா, உமேஷ் ஷெட்டி, சக்ரவர்த்தி சூலிபெலே ஆகியோர் மீது புகார் செய்தார்.
அதில், 'சுதந்திர பூங்காவை தவிர, வேறு எங்கும் போராட்டம் நடத்தக்கூடாது என்று அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த விதியை மீறி, அரசு அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முன் அனுமதி பெறாமல், டவுன் ஹால் முன் போராட்டம் நடத்தி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தனர். சட்டம் - ஒழுங்கை சீர்குலைத்தனர்' என குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில், சக்ரவர்த்தி சூலிபெலே மனுதாக்கல் செய்திருந்தார்.
இம்மனு, நேற்று நீதிபதி கிருஷ்ணா தீட்ஷித் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், 'பெங்களூரில் சுதந்திர பூங்காவை தவிர, மற்ற இடங்களில் போராட்டம் நடத்த தடை உள்ளது. இந்த உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதாக, எஸ்.ஜே.பார்க் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர், வழக்கு தொடர்ந்து உள்ளார். ஆனால் விதிப்படி, வழக்கு தொடர இன்ஸ்பெக்டருக்கு அதிகாரம் இல்லை. எனவே, மனுதாரர் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்' என வாதிட்டார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி கிருஷ்ணா தீட்ஷித், 'சட்டப்படி உத்தரவு பிறப்பித்த அதிகாரி அல்லது அவருக்கு மேல் உள்ள அதிகாரி தான் வழக்கு தொடர வேண்டும்.
இவ்வழக்கில், மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இன்ஸ்பெக்டர் புகார் அளித்ததை, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது சட்டவிரோதம். எனவே, சக்ரவர்த்தி சூலிபெலே மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது' என தெரிவித்தார்.

