ADDED : பிப் 07, 2024 10:59 PM

ஹூப்பள்ளி நகரில் இருந்து, 5 கி.மீ., தொலைவில் நிருபதுங்கா மலை அமைந்துள்ளது. நகரின் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.
காணும் இடமெல்லாம் மரங்கள், செடி, கொடிகளுக்கு இடையே வளைந்து, நெளிந்து செல்லும் பாதையில் செல்வதே சிறந்த உணர்வை ஏற்படுத்தும். நல்ல அனுபவத்தை தரும்.
ஹூப்பள்ளி - தார்வாட் மக்கள், தங்கள் வார இறுதி நாட்களை கழிப்பதற்கு, நிருபதுங்கா மலைக்கு செல்வது வழக்கம். காதலர்கள் தேர்வு செய்யும் இடமாகவும் விளங்குகிறது.
நகர வாழ்க்கையில் இருந்து விலகி, ஹாயாக பொழுதுபோக்குவதற்கு ஏற்றம் இடம் என்றே சொல்லலாம். காலை, மாலை பொழுதில் சில்லென்று வீசும் காற்று புத்துணர்வை ஏற்படுத்துவதாக உள்ளது.
மலை அடிவாரத்தில், பெரியோருக்கு 10 ரூபாயும்; 3 வயதுக்கு மேற்பட்ட சிறாருக்கு 5 ரூபாயும் கொடுத்து டிக்கெட் வாங்க வேண்டும். 1 கி.மீ., துாரம் நடந்து செல்ல வேண்டும்.
அங்கிருந்து, இயற்கையை ரசித்தபடி படிகட்டுகள் மீது ஏறி, உச்சிக்கு செல்லலாம்.
மேலே சென்ற பின், ஹூப்பள்ளி நகரின் மொத்த அழகையும் ஒரு சேர ரசிக்கலாம். நடக்க முடியாத முதியோருக்கு, மலை மீது செல்வதற்கு தனியார் வாகனங்களும் இயக்கப்படுகின்றன.
படிகட்டுகள் மீது ஏறும்போது, இடையிடையே ஓய்வு எடுத்துக் கொள்ள இருக்கைகள் போடப்பட்டுள்ளன.
இருபுறங்களிலும் சோலார் மின்சாரத்தில் இயங்கும், எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. உச்சியில் வானுயர்ந்த ஒரு ராட்சத விளக்கும் பொருத்தப்பட்டுள்ளன.
கூடவே உணவு பொருட்கள் கொண்டு செல்வது நல்லது. காலை சிற்றுண்டி முடித்துவிட்டு, மலை மீது சென்றுவிட்டு, கொண்டு வந்த உணவை மதியம் சாப்பிடலாம். மாலையில் கீழே இறங்கி வீட்டுக்குச் செல்லலாம்.
ஹூப்பள்ளி நகருக்கு அருகில் இருப்பதால், வார இறுதி நாட்கள் மட்டுமின்றி, சாதாரண நாட்களிலும் மக்கள் இருப்பதை காண முடிகிறது. விடுமுறை நாட்களில் கூட்டம் அலை மோதும். குறிப்பாக இளைஞர் பட்டாளம் அதிகமாக இருக்கும்.
சொந்த வாகனங்களில் செல்வதே சிறந்தது. மலை அடி வாரத்தில், வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது
- நமது நிருபர் -
.

