இரட்டை கொலை செய்து புதைத்த விவகாரம் குழந்தை உடல் கிடைக்காததால் குழப்பம்
இரட்டை கொலை செய்து புதைத்த விவகாரம் குழந்தை உடல் கிடைக்காததால் குழப்பம்
ADDED : மார் 13, 2024 01:19 AM
மூணாறு:இடுக்கி மாவட்டம் கட்டப்பனை திருட்டு வழக்கில் கைதானவர்கள் இரட்டை கொலை செய்த விவகாரத்தில் பச்சிளம் குழந்தை உடல் கிடைக்காததால் குழப்பம் நிலவுகிறது.
கட்டப்பனை அருகே காஞ்சியாறு கக்காட்டுகடையைச் சேர்ந்த விஷ்ணு 27, உதவியாளர் ராஜேஷ் என்ற நிதிஷ் 31, ஆகியோர் கட்டப்பனையில் வேலாயுதன் ஒர்க் ஷாப்பில் மார்ச் 2 அதிகாலை திருட முயன்றனர்.
அங்கு வந்த வேலாயுதன் மகன் பிரவீனை கண்டு தப்ப முயன்ற போது விஷ்ணு கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டது. இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்த போது விஷ்ணுவின் தந்தை விஜயன், அவரது சகோதரியின் பச்சிளம் குழந்தை ஆகியோரை கொலை செய்து புதைத்தது தெரிந்தது.
பீர்மேடு கிளை சிறையில் நிதிஷ் அடைக்கப்பட்ட நிலையில் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விஷ்ணுவை போலீசார் அனுமதித்தனர். மார்ச் 9ல் நிதிஷை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.
அதில் நிதிஷ்க்கும், விஷ்ணுவின் சகோதரிக்கும் தகாத உறவில் பிறந்த ஆண் குழந்தையை 2016 ஜூலையிலும், 2023 ஆகஸ்ட்டில் விஜயனையும் அவர்கள் கொலை செய்து புதைத்தது தெரியவந்தது. நிதிஷ் கூறியபடி காஞ்சாறு கக்காட்டுகடை பகுதியில் வாடகை வீட்டினுள் புதைக்கப்பட்ட விஜயனில் உடலை மார்ச் 10ல் போலீசார் தோண்டி எடுத்து ஆய்வுக்கு அனுப்பினர்.
குழந்தையை புதைத்தாக கூறிய கட்டப்பனை சகாரா ஜங்ஷனில் குடியிருந்த வீட்டின் அருகில் உள்ள மாட்டு கொட்டகையை 2 நாட்கள் தோண்டி ஆய்வு செய்தும் எந்த தடயங்களும் சிக்கவில்லை. இதற்கிடையில் புதைத்த குழந்தையை தோண்டி எடுத்து தீவைத்து எரித்ததாக நிதிஷ் மாற்றி கூறியதால் குழப்பம் நிலவுகிறது. அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

