ADDED : மே 09, 2025 09:19 PM
புதுடில்லி:டில்லி சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு, 13ம் தேதி துவங்குகிறது.
பிப்ரவரியில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., ஆட்சியைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, முதல்வராக ரேகா குப்தா மற்றும் அமைச்சர்கள் பிப்., இறுதியில் பதவியேற்றனர்.
மார்ச் 24ம் தேதி சட்டசபையில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கான பட்ஜெட்டை முதல்வர் ரேகா குப்தா தாக்கல் செய்தார்.
இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு, 13ம் தேதி மதியம் 2:00 மணிக்கு துவங்குகிறது.
இந்தக் கூட்டத் தொடரில்,தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணங்களை ஒழுங்குபடுத்த, 'டில்லி பள்ளி கல்வி கட்டண நிர்ணயம் மற்றும் கட்டண ஒழுங்குமுறை மசோதா - 2025' தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வரைவு மசோதாவுக்கு ஏப்ரல் 29ம் தேதி அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அப்போது, இந்த மசோதவை நிறைவேற்ற சட்டசபையில் சிறப்புக் கூட்டம் நடத்தப்படும் என முதல்வர் ரேகா குப்தா கூறியிருந்தார்.
அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிக்கு ஒரு கோடி ரூபாய் வரை அபராதம், மற்றும் உரிமத்தை ரத்து செய்தல் போன்றா விதிமுறைகள் இந்த மசோதாவில் வகுக்க-ப்பட்டுள்ளன.

