ஆந்திராவில் ஓடும் ரயிலில் திடீர் தீவிபத்து; 2 பெட்டிகள் நாசம்... பயணி ஒருவர் பலி
ஆந்திராவில் ஓடும் ரயிலில் திடீர் தீவிபத்து; 2 பெட்டிகள் நாசம்... பயணி ஒருவர் பலி
ADDED : டிச 29, 2025 08:20 AM

விசாகப்பட்டினம்: ஆந்திரா எலமஞ்சிலியில் டாடா நகர்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் 2 பெட்டிகள் தீயில் எரிந்து நாசமாகின. இதில், பயணி ஒருவர் பலியாகினார்.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது; டாடா நகர் - எர்ணாகுளம் அதிவேக விரைவு ரயில் ஆந்திராவின் எலமஞ்சி ரயில்நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அதிகாலை 12. 45 மணியளவில் ரயிலின் இருபெட்டிகளில் தீவிபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது. ஒரு பெட்டியில் 82 பயணிகளும், மற்றொரு பெட்டியில் 76 பயணிகளும் இருந்தனர். இந்த தீவிபத்தில் 70 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர் உயிரிழந்தார். அவரது பெயர் சந்திரசேகர் சுந்தரம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதையடுத்து, தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீ அணைக்கப்பட்டது. பிறகு, தீவிபத்தால் பாதிக்கப்பட்ட பெட்டிகள், ரயிலில் இருந்து பிரிக்கப்பட்டது. அதன்பிறகு, தீயில் எரிந்த பெட்டியில் இருந்த பயணிகள் வேறு பெட்டிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு, அந்த ரயில் மீண்டும் புறப்பட்டு சென்றது, எனக் கூறினர்.

