இந்தியர்களை விடுவிப்பது குறித்து ரஷ்யாவுடன் பேச்சு: மத்திய அரசு
இந்தியர்களை விடுவிப்பது குறித்து ரஷ்யாவுடன் பேச்சு: மத்திய அரசு
ADDED : மார் 08, 2024 11:48 PM
புதுடில்லி: ரஷ்யாவில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, அந்நாட்டு ராணுவத்தினரிடம் சிக்கியுள்ள இந்தியர்களை விடுவிப்பது தொடர்பாக, அங்குள்ள அதிகாரிகளிடம் பேசி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ரஷ்யாவில் அதிக சம்பளத்துக்கு வேலை வாங்கி தருவதாகக் கூறி, டிராவல் ஏஜன்டுகள் பலர், ஏராளமானோரை அந்நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால், அங்கு வேலை வாங்கி தராமல், கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுடன் சண்டையிட, ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
அந்த வகையில், 20க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்தில் தற்போது இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த விவகாரம் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், நாடு முழுதும் ஏழு நகரங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட டிராவல் ஏஜன்டுகள் மீது, மனித கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று கூறியதாவது:
டிராவல் ஏஜன்டுகளால் இந்தியர்கள் ஏமாற்றப்பட்டு உள்ளனர்.
பொய்யான வாக்குறுதிகள் அளித்து, அவர்களை ரஷ்யாவுக்கு டிராவல் ஏஜன்டுகள் அனுப்பி வைத்துள்ளனர். இவர்களின் நெட்வொர்க்கை கண்டறிந்துள்ளோம்.
பல ஏஜன்டுகள் மீது, மனித கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ரஷ்ய ராணுவத்தில் உள்ள இந்தியர்களை விடுவிப்பது மற்றும் தாயகம் அழைத்து வருவது தொடர்பாக, அந்நாட்டு ராணுவத்தினரிடம் பேச்சு நடத்தி வருகிறோம். விரைவில் அவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவர்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

