குறிப்பிட்ட திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுப்பு
குறிப்பிட்ட திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுப்பு
ADDED : பிப் 25, 2024 02:37 AM
புதுடில்லி:அரசின் கொள்கை விவகாரங்களை ஆய்வு செய்வதில், நீதித் துறைக்கு ஒரு குறிப்பிட்ட எல்லைதான் உள்ளது. குறிப்பிட்ட கொள்கை அல்லது திட்டத்தைச் செயல்படுத்தும்படி, மாநில அரசுகளுக்கு உத்தரவிட முடியாது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராட, 'கம்யூனிட்டி கிச்சன்' எனப்படும், சமூக சமையலறைகளுக்கான திட்டத்தை உருவாக்க, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, சமூக ஆர்வலர்கள் அனுன் தவான், இஷான் சிங், குனாஜன் சிங் ஆகியோர், உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பேலா எம்.திரிவேதி, பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் கூறியதாவது:
உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்ய, சரியான நோக்கத்துடன், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் நடைமுறையில் உள்ளது. மேலும் அந்த சட்டத்தின் கீழ், மத்திய - மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
எனவே, இந்த விவகாரத்தில் நாங்கள் எந்த வழிகாட்டுதலையும் வழங்க விரும்பவில்லை.
அரசின் கொள்கை விவகாரங்களில் நீதித் துறைக்கு ஒரு குறிப்பிட்ட எல்லையே உள்ளது. சிறந்த, நியாயமாக அல்லது புத்திசாலித்தனமாக இருக்கிறது என்ற அடிப்படையில், குறிப்பிட்ட கொள்கை அல்லது திட்டத்தை செயல்படுத்தும்படி, மாநிலங்களுக்கு நீதிமன்றங்கள் உத்தரவிட முடியாது.
அதே சமயம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், சமூக சமையலறைகள் அமைப்பது போன்ற மாற்று நலத்திட்டங்கள் குறித்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ஆய்வு செய்யலாம்.
இவ்வாறு கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர்.

