sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அரசு அலுவலர்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை: வாய்மொழி உத்தரவுகளை அமல்படுத்த தேவையில்லை

/

அரசு அலுவலர்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை: வாய்மொழி உத்தரவுகளை அமல்படுத்த தேவையில்லை

அரசு அலுவலர்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை: வாய்மொழி உத்தரவுகளை அமல்படுத்த தேவையில்லை

அரசு அலுவலர்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை: வாய்மொழி உத்தரவுகளை அமல்படுத்த தேவையில்லை


UPDATED : ஜன 23, 2024 03:35 PM

ADDED : ஜன 23, 2024 01:35 AM

Google News

UPDATED : ஜன 23, 2024 03:35 PM ADDED : ஜன 23, 2024 01:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : ராமர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பான நிகழ்ச்சிகளை, நேரடியாக ஒளிபரப்பவும், அன்னதானம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தவும், தமிழகத்தில் அனுமதி மறுக்கப்பட்டதை, உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. 'அரசு நிர்வாக பணியில் உள்ளவர்கள், எந்த விஷயத்திலும், எழுத்துப்பூர்வமான உத்தரவுகளை மட்டுமே செயல்படுத்த வேண்டும். வாய்மொழி உத்தரவுகளை செயல்படுத்தக் கூடாது' என கூறியுள்ள உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக பதிலளிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று விமரிசையாக நடந்தது. இது தொடர்பாக, நாடு முழுதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பல மாநிலங்களில், அரை நாள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டு இருந்தது.தமிழகத்தில் கும்பாபிஷேகம் தொடர்பான நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய, சிறப்பு பூஜைகள் நடத்த, அன்னதானம் வழங்க அனுமதி மறுக்கப்பட்டது.

வாய்மொழி உத்தரவு


இது தொடர்பாக, பா.ஜ.,வைச் சேர்ந்த வினோஜ் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் சஞ்சிவ் கண்ணா, திபாங்கர் தத்தா அமர்வில், நேற்று காலை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டார் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டதாவது: தனியார் கோவில் உள்ளிட்ட இடங்களில் கூட, கும்பாபிஷேகம் தொடர்பான நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இது தொடர்பாக, அரசு அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு அளிக்கப்பட்டுஉள்ளது. ஒரு குறிப்பிட்ட பகுதியில், மற்ற மதத்தினரும் வசிப்பதால், இதுபோன்று ஒரு குறிப்பிட்ட மதத்தின் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க முடியாது என்று கூறியுள்ளனர். உண்மையான காரணம் எதுவும் குறிப்பிடாமல், இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்க முடியாது. இதில் மிகக் கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் வாதிட்டார்.

தமிழக அரசின் சார்பில் ஆஜரான, கூடுதல் அட்வகேட் ஜெனரல் அமித் ஆனந்த் திவாரி, ''இதில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை உள்ளது. ஒருவேளை அவர்கள் பேரணி நடத்தி, மசூதிக்கு முன்பாக சென்று கோஷமிட்டால் பிரச்னை ஏற்படும் என்பதால், அனுமதி தரப்படவில்லை,'' என்றார்.

அனுமதி மறுப்பது


இதையடுத்து, அமர்வு கூறியுள்ளதாவது: அரசு நிர்வாகத்தில் உள்ளவர்கள், எந்த விஷயத்திலும், எழுத்துப்பூர்வமான உத்தரவுகளை மட்டுமே செயல்படுத்த வேண்டும். வாய்மொழி உத்தரவுகளை செயல்படுத்தக் கூடாது. இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு சார்பில் எழுத்துப்பூர்வமான காரணங்களை தெரிவிக்க வேண்டும். அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்த, எத்தனை விண்ணப்பங்கள் வந்தன; அதில் எத்தனை விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது என்ற விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும். எத்தனை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன என்பதை, காரணத்துடன் தெரிவிக்க வேண்டும். நம் சமுதாயத்தில், பலதரப்பட்ட மக்கள் ஒன்றாக வசித்து வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட பகுதியில், மற்ற மதத்தினர் வசிப்பதால், ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்படுவது ஏற்புடையதாக இல்லை. அப்படி பார்த்தால், எந்த ஒரு மதத்தினரும் எந்த நிகழ்ச்சியையும் நடத்த முடியாது.

மத நிகழ்ச்சிகளுக்கு இதுபோன்ற காரணங்களை கூறி அனுமதி மறுக்க முடியாது. சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கருதினால், அந்த பகுதியில் போதிய கட்டுப்பாடுகளை விதிக்கலாம். அதை விடுத்து, அனுமதி மறுப்பது ஏற்க முடியாது. இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

அமைதி, மகிழ்ச்சிக்காகவே பக்தி: ஐகோர்ட்

சென்னை, ஆவடி அருகே பட்டாபிராமில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், பஜனை மற்றும் அன்னதான நிகழ்ச்சிக்கு அனுமதி நிராகரிக்கப்பட்டதால், உயர் நீதிமன்றத்தில் கணபதி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.திருமண மண்டபத்தில் ராமநாம பஜனை, அன்னதானம் நடத்துவதில், போலீசார் குறுக்கிட தடை விதிக்க, மனுவில் கோரப்பட்டது.இந்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்க கோரப்பட்டது. இதையடுத்து, நேற்று காலை 9:30 மணிக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கை விசாரணைக்கு எடுத்தார். அவரது அறையில் விசாரணை நடந்தது.மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் ஜி.கார்த்திகேயன், எஸ்.ரவி, போலீஸ் தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன் ஆஜராகினர்.வழக்கை விசாரணைக்கு எடுத்தபோது, ஆவடி காவல் உதவி ஆணையர் அனுமதி வழங்கியிருப்பதாக, அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்; அதற்கான கடிதத்தையும், தாக்கல் செய்தார். இதையடுத்து, பல இடங்களில் இந்த நிகழ்ச்சி கள் நடக்க உள்ளதாக கூறப்படுவதால், அரசு மற்றும் போலீசின் நிலை குறித்து தெரிவிக்கும்படி, நீதிபதி கூறினார்.
அதன்படி, அரசின் நிலை மற்றும் போலீசின் நிலை குறித்து, நீதிமன்றத்தில் தெரிவித்ததாவது:* மண்டபம், தனியார் இடங்கள், தனியார் கோவில்களில் விழாக்கள், பஜனைகள், அன்னதானம் நடத்த, போலீசார் அனுமதி தேவையில்லை. அயோத்தியில் நடக்கும் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்வது, நிகழ்ச்சி அமைப்பாளர்களைப் பொறுத்தது* இந்த நிகழ்வுகள் நடக்கும்போது, பொது மக்கள் அங்கு கூடுவதற்கு வாய்ப்பு உள்ளதால், நிலைமை கட்டுக்குள் இருக்கவும், போக்குவரத்துக்கு இடையூறின்றி இருக்கவும் ஏதுவாக உரிய நடவடிக்கைகள் எடுக்க, போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்*அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் வரும் கோவில்களில், நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டிருந்தால், துறை அதிகாரிக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அனுமதி வழங்கப்படும்*பதற்றமான பகுதி என கருதினால், உள்ளூர் நிலையை பரிசீலித்து, சட்டம் -ஒழுங்கு பிரச்னைக்கு வழிவகுக்காத வகையில், கட்டுப்பாடுகளை போலீசார் விதிக்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இதை பரிசீலித்த பின், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு: அரசு மற்றும் போலீஸ் தரப்பு எடுத்த நிலைப்பாட்டில் இருந்து, பஜனை பாடுவது, ராமநாமம் கூறுவது, அன்னதான நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது.சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு இடம் கொடுக்காமல், பொறுப்பான முறையில் இந்த நிகழ்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். தவறான தகவல்கள் பரவ, அனுமதிக்கக் கூடாது. இதை, சம்பந்தப்பட்ட அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.கடவுள் மீதான பக்தி என்பது, அமைதி மற்றும் மகிழ்ச்சிக்காக தான் என்பதையும், சமூகத்தில் நிலவும் சமநிலையை இடையூறு செய்வதற்காக அல்ல என்பதையும், ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.



Image 1222717

ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமையை தி.மு.க. தடுக்கிறது: நிர்மலா சீதாராமன்

காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில், எல்.இ.டி., திரையில், ராமர் கோவில் திறப்பு விழா நேரலை செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்திருந்தது. இதற்காக பந்தல் அமைத்து, சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் சிலைகள் வைக்கப்பட்டன. ராமர் கோவில் கும்பாபிேஷகத்தை காண, எல்.இ.டி., திரை அமைக்கப்பட்டு இருந்தது.அந்த திரையை அகற்ற, காஞ்சிபுரம் போலீசார் நேற்று காலை கெடுபிடி காட்டியதால் கழற்றப்பட்டது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கோவிலுக்குள் காலை 9:30 மணிக்கு வந்தார். காமாட்சியம்மனை தரிசனம் செய்தார். நிகழ்ச்சியில் சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, பஜனை, சொற்பொழிவு, ராம சங்கீர்த்தனம் உள்ளிட்டவை நடந்தன.
இதற்கிடையே, உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, பகல் 11:45 மணிக்கு, மீண்டும் எல்.இ.டி., திரை பொருத்தப்பட்டு, ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்ச்சி நேரலை செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் நிர்மலா உள்ளிட்ட பலரும் நேரலை நிகழ்ச்சியை பார்த்தனர்.
பின், நிர்மலா கூறியதாவது:தமிழக காவல் துறையை, அரசு தவறாக பயன்படுத்துகிறது. போலீசார் இயல்பாக நடந்து கொள்ளவில்லை. ஹிந்து விரோத தி.மு.க., அதை செய்கிறது. ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமையை, தி.மு.க., தடுக்கிறது. நாங்கள் எதையும் தடுக்கவில்லை என, அறநிலையத் துறையினர் கூறினர். போலீசாரை வைத்துக் கொண்டு இங்கேயும் தடுத்தனர். காமாட்சியம்மன் கோவில், தனியார் கோவில். இங்கே அறநிலையத் துறைக்கு அதிகாரம் கிடையாது. இங்கேயும் அவர்கள் ஆதிக்கத்ததை காட்ட முயன்றனர். நீதிமன்றமும் நிரூபித்து விட்டது; ராமரும் நிரூபித்து விட்டார். இந்த நாட்டில் ஹிந்து மக்களின் உரிமையை பறிக்க முயற்சி நடந்தால், நியாயமாகவும், சட்டப்படியாக செல்லுவோமே தவிர, சாலையில் வந்து சண்டையிடும் மக்கள் நாங்கள் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.



'ஆன்மிகத்திற்கு எதிரான ஆட்சியாக தி.மு.க. அரசை சித்தரிக்க முயற்சி'

தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியை ஒட்டி, தமிழக கோவில்களில் எந்த வழிபாட்டிற்கும் அனுமதி மறுக்கப்படவில்லை. கவர்னர் சென்ற கோவிலில், சிறந்த முறையில், தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அவர் கூறியதுபோல் இந்த ஆட்சியில், எந்த விதமான அச்சுறுத்தலும் யாருக்கும் கிடையாது.ஏதாவது ஒரு வகையில், ஆன்மிகத்திற்கு எதிராக இருப்பது போல் இந்த ஆட்சியை சித்தரிக்க வேண்டும் என்பதற்காக, கவர்னரும், பா.ஜ.,வும் கூட்டு சேர்ந்து உள்ளனர். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் அரசியல் கண்ணோட்டத்தோடு தான் அணுகுகிறார். காஞ்சிபுரம், காமாட்சி அம்மன் கோவிலில், ராம பஜனை பாடும் நிகழ்ச்சியில், அவர் பங்கேற்றுள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.கோவிலில் எல்.இ.டி., திரை அமைப்பதற்கும், அன்னதானம் அளிப்பதற்கும் நாங்கள் தடை செய்யவில்லை. ஆனால், முறையாக அனுமதி பெற வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆன்மிகத்தை அரசியலாக்க முற்படும்போது தான் சட்டத்திற்கு உட்பட்டு, அறநிலையத் துறை முடிவுகளை மேற்கொள்கிறது. ஆன்மிகவாதிகளை அரவணைக்கும், அவர்களின் இறை வழிபாட்டிற்கு முழுதுமாக துணை நிற்கும் ஆட்சி இது. ஆன்மிகத்திற்கும், இறையன்பர்களுக்கும் முழு சுதந்திரத்தோடு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. ஆன்மிகத்துக்கு எதிரான ஆட்சி என திசை திருப்புவதற்காக, பொய் பிரசாரம் செய்கிறார் நிர்மலா.இவ்வாறு அவர் கூறினார்.



Image 1222715

கண்ணுக்கு புலப்படாத அச்சம்!: கவர்னர் ரவி

சென்னை மேற்கு மாம்பலம், கோதண்டராமர் கோவிலுக்கு நேற்று காலை சென்று, அனைவரும் நலம் பெற, பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன். இந்த கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ளது.அர்ச்சகர்கள் மற்றும் கோவில் ஊழியர்களின் முகங்களில், கண்ணுக்கு புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது. நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது.பால ராமர் பிராண பிரதிஷ்டையை, நாடு முழுதும் கொண்டாடும்போது, இக்கோவில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது.



'அரசியலின்றி வேறென்ன?': முதல்வர் ஸ்டாலின்

கவர்னர் ரவி தன் மனதின் வன்மத்தை பதிவிட்டுள்ளார். காமாலைக் கண்களுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பார்களே, அந்த நிலையில்தான் இருக்கிறார். தமிழக மக்களின் உணர்வுகளை கொஞ்சமும் அறியாமல், தமிழகத்தின் கவர்னர் பொறுப்பில் உள்ளார் ரவி. கோதண்டராமர் கோவில் அர்ச்சகர்களே, எவ்வித பயத்திற்கோ, அடக்குமுறை உணர்வுக்கோ இடமில்லை என தெரிவித்துள்ள நிலையில், கவர்னர் அலறுவதற்கு காரணம், அரசியலின்றி வேறென்ன இருக்க முடியும்? தமிழகத்தில் எந்தக் கோவிலிலும் பக்தர்கள் வழிபாடு நடத்தலாம். தைப்பூச நாளில் முருகன் கோவில்களிலும், சித்திரைத் திருவிழாவில், அழகர் ஆற்றில் இறங்கும்போதும், திருவாரூர் ஆழித் தேரோட்டத்தின்போதும், கும்பகோணம் மகாமகம் திருவிழாவிலும், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அறுபத்து மூவர் வீதியுலாவிலும், ஆயிரமாயிரம் பக்தர்கள் உண்மையான பக்தியுடன் பங்கேற்பர். அவர்களுக்கு பிற மதத்தினரும் ஒத்துழைப்பு அளிப்பர். இதை சமூக நீதிக் கொள்கை அடிப்படையிலான, மத நல்லிணக்க நிலமாகிய தமிழகத்தில் காண முடியும். பா.ஜ., தன் தோளில் சுமக்கும் அயோத்தி ராமர் கோவில் அரசியலை, அமைதியான கோதண்டராமர் கோவிலில் போய், கவர்னர் தேடியிருக்கிறார் என்றால், அவரிடம் இருப்பது பக்தியா, பகல் வேடமா?இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



அச்சமல்ல; அது சோர்வு!

கவர்னர் வந்ததால், எங்களுக்கு எந்த அழுத்தமும் இல்லை. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், புஷ்ப அலங்காரம் செய்யும் பணிகள், நேற்று முன்தினம் முதல் நடந்து வருகின்றன. காலையில் சிறப்பு பூஜை, நெய்வேத்தியம் நடந்தது. இரவு முழுதும் கண் விழித்து பணி செய்தோம். நானும் என்னுடன் பணி செய்த அர்ச்சகர்களும் சோர்வாக இருந்தோம். இதனால், எங்கள் முகம் வாடியது போன்ற தோற்றத்தில் இருந்தது. அதை அவர் அச்சமாக புரிந்து கொண்டார் என நினைக்கிறோம்.- அர்ச்சகர் மோகன்,கோதண்டராமர் கோவில் மாம்பலம்,சென்னை.








      Dinamalar
      Follow us