ADDED : ஏப் 08, 2025 09:59 PM
பாலக்காடு,; பாலக்காடு ஐ.ஐ.டி.,யில் ஜூன் 30ம் தேதி தொடங்கும் கோடைகால பயிற்சி திட்டத்திற்கு, மே மாதம் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், பாலக்காடு ஐ.ஐ.டி.,யில் கணித துறையின் தலைமையில் நடக்கும், கோடைகால பயிற்சி திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். கணிதத்தில் ஆர்வமுள்ள இளைஞர்களை அடையாளம் காண்பது, அமர்வுகள் வாயிலாக கணித சிக்கல்களைத் தீர்க்க அவர்களுக்கு உதவுவது மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
பி.எஸ்சி., கணிதம் இரண்டாம் ஆண்டு முடித்தமாணவர்கள், 2025 ஜூனில் ஒருங்கிணைந்த பி.எஸ்., எம்.எஸ்., இரண்டாம் ஆண்டு படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மே மாதம் 7ம் தேதி வரை 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பிக்கலாம். கணித ஆசிரியர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தேர்வுப் பட்டியல், மே 21ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும். பயிற்சி திட்டம் ஜூன் 30ம் தேதி தொடங்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பயண செலவு, ஐ.ஐ.டி., வளாகத்தில் விடுதி, உணவு, படிப்புப் பொருட்கள், இன்டர்நெட் மற்றும் நூலக வசதிகள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு https://math-iitpkd.github.io/stp2025/ல் தெரிந்து கொள்ளலாம்.

