ADDED : அக் 29, 2024 07:34 AM

பெங்களூரு : 'கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள தர்ஷனுக்கு பக்கவாதம் ஏற்படலாம்' என, உயர் நீதிமன்றத்தில், மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சித்ரதுர்காவின் ரேணுகாசாமி, 33, என்பவரை கொலை செய்த வழக்கில், நடிகர் தர்ஷன், பல்லாரி சிறையில் உள்ளார். அவருக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளது. கடந்த 22ம் தேதி பல்லாரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவருக்கு, எம்.ஆர்.ஐ., ஸ்கேன் செய்யப்பட்டது. தற்போது அவர் நடக்க முடியாமல் தவித்து வருகிறார். தர்ஷன் தரப்பில் ஜாமின் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது.
நேற்று நடந்த விசாரணையின்போது, தர்ஷனின் மருத்துவ அறிக்கையை அவரது வக்கீல் நாகேஷ், நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
நாகேஷ் வாதாடுகையில், ''தர்ஷனுக்கு முதுகு வலி அதிகரித்துள்ளது. அவருக்கு அவசர சிகிச்சை தேவைப்படுகிறது. எம்.ஆர்.ஐ.,- - சி.டி., ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. முதுகு வலியால் சிறுநீரக பிரச்னை ஏற்படும். பக்கவாதம் ஏற்பட்டு கால் முடங்க கூட வாய்ப்புள்ளது என்று டாக்டர் கூறியுள்ளார். அவருக்கு உடனடியாக பிசியோதெரபி மற்றும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர் பரிந்துரை செய்துள்ளார்,'' என்றார்.
அரசு தரப்பு வக்கீல் பிரசன்ன குமார், மருத்துவ அறிக்கையின் நகலை பார்த்துவிட்டு, ஆட்சேபனை தெரிவிப்பதாக கூறினார்.
இதனால் விசாரணையை, இன்று மதியம் 2:30 மணிக்கு நீதிபதி விஸ்வஜித் ஷெட்டி ஒத்திவைத்தார்.

