ஊழலால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு உப லோக் ஆயுக்தா நீதிபதி வருத்தம்
ஊழலால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு உப லோக் ஆயுக்தா நீதிபதி வருத்தம்
ADDED : அக் 25, 2024 07:47 AM

பெங்களூரு: ''நாட்டின் வளர்ச்சி, ஊழலால் பாதிக்கப்படுகிறது. அரசு ஊழியர்கள் நேர்மையுடனும், நியாயமாகவும் தங்கள் பணியை செய்ய வேண்டும்,'' என, உபலோக் ஆயுக்தா நீதிபதி பனீந்திரா தெரிவித்தார்.
பெங்களூரு நகர மாவட்டத்தின் எலஹங்கா, பெங்களூரு கிழக்கு தாலுகாக்களில் பொதுமக்களின் புகார் விசாரணை, வழக்குகளை தீர்ப்பது தொடர்பாக நேற்று கூட்டம் நடந்தது.
கூட்டத்தை துவக்கி வைத்து, உபலோக் ஆயுக்தா நீதிபதி பனீந்திரா பேசியதாவது:
நாட்டின் வளர்ச்சி, ஊழலால் பாதிக்கப்படுகிறது. அரசு ஊழியர்கள், ஊழல் செய்வதை விடுத்து, நேர்மையான முறையில் தங்கள் பணியை செய்ய வேண்டும்.
உண்மை, விசுவாசம், நேர்மையை வெளிப்படுத்தி, நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும். மாநில அரசின் சலுகைகள் பெற, அனைத்து குடிமக்களுக்கும் உரிமை உண்டு. அனைவருக்கும் சம பங்கு, சமத்துவம் என்ற அரசியலமைப்பு சட்டத்தின் கீழ், லோக் ஆயுக்தா அமைப்பு செயல்பட்டு வருகிறது.
மக்களுக்கு அரசின் சலுகைகள் கிடைக்கா விட்டால், அது கிடைக்க செய்யும் வகையில் இந்தமைப்பு செயல்படும்.
ஊழலை ஒழிப்பது, ஊழலை கட்டுப்படுத்துவது, மக்களின் குறைகளை தீர்ப்பது தான் லோக் ஆயுக்தாவின் நோக்கம். சேவை செய்யும் பணியில் அதிகாரிகள் கடமை தவறினாலோ அல்லது தவறாக நடந்து கொண்டாலோ, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற வழக்குகளில் பொய் புகார் அளித்தால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பெங்களூரு நகர மாவட்டத்தின் எலஹங்கா, பெங்களூரு கிழக்கு தாலுகாக்களில் பொதுமக்களின் புகார்கள், வழக்குகளை தீர்ப்பது தொடர்பான கூட்டத்தை, உப லோக் ஆயுக்தா நீதிபதி பனீந்திரா துவக்கி வைத்தார். இடம்: பெங்களூரு.

