ரஷ்யாவிடமிருந்து வாங்குவதை நிறுத்தினால் 76,500 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்'
ரஷ்யாவிடமிருந்து வாங்குவதை நிறுத்தினால் 76,500 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்'
ADDED : ஆக 09, 2025 07:41 AM

புதுடில்லி: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி செலவு 76,500 கோடி ரூபாய் அதிகரிக்கக் கூடும் என எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில், இது ஒரு லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், அனைத்து நாடுகளும் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்தி, மற்ற நாடுகளின் உற்பத்தியும் அதிகரிக்காதபட்சத்தில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 10 சதவீதம் அதிகரிக்கக் கூடும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பொதுத்துறையைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் தலைவர் விகாஸ் கௌஷல், “ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தவோ அல்லது தொடர்ந்து மேற்கொள்ளவோ அரசிடம் இருந்து எந்த அறிவுறுத்தலும் வரவில்லை. பொருளாதார காரணிகளைக் கருத்தில் கொண்டு, தகுந்த முடிவெடுக்க, எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம், கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் மொத்தம் 66.60 லட்சம் டன் கச்சா எண்ணெய்யை சுத்திகரித்தது. இதில் ரஷ்ய கச்சா எண்ணெய்யின் பங்கு 13.20 சதவீதம் மட்டுமே. இதற்கு புவிசார் அரசியல் சூழல் காரணம் கிடையாது.
மாறாக, தள்ளுபடி குறைந்ததால் எடுக்கப்பட்ட பொருளாதார ரீதியான முடிவு தான் இது. மீண்டும் அதிக தள்ளுபடி வழங்கப்பட்டால், ரஷ்யாவிடம் இருந்து அதிகம் வாங்க தயாராக உள்ளோம்.
அதே நேரத்தில், இதன் இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்றாலும், பெரிய பாதிப்பு இருக்காது.
இவ்வாறு தெரிவித்தார்.