மாநிலம் தோறும் காங்.,கிற்கு தனித்தனி கொள்கை: குமாரசாமி
மாநிலம் தோறும் காங்.,கிற்கு தனித்தனி கொள்கை: குமாரசாமி
ADDED : பிப் 06, 2024 11:26 PM

பெங்களூரு : ''கர்நாடகாவிலும், கேரளாவிலும் காங்கிரஸ் தனித்தனி கொள்கை வைத்துள்ளது,'' என ம.ஜ.த., வின் முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக, 'எக்ஸ்' என்ற பதிவில் அவர் கூறி உள்ளதாவது:
கேரளா முதல்வர் பினராயி விஜயன், 'மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்ப, எங்களுடன் வாருங்கள்,' என எதிர்க்கட்சியினரை கேட்டு கொண்டார். அதற்கு அம்மாநில காங்கிரசார், 'தேவையில்லாத செலவுக்கு மக்களின் பணத்தை வீணடிக்கிறீர்களே. நாங்கள் வரவில்லை' என்றனர்.
கேரளா முதல்வர் அழைப்பு விடுத்த அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு செல்லாமல், சட்டசபையில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் போதும் செல்லவில்லை. வரும் 8ம் தேதி புதுடில்லியில் நடத்தும் போராட்டத்திலும் பங்கேற்க மறுத்துள்ளனர். ஆனால், கர்நாடகாவில், அதற்கு நேர் மாறாக நடக்கிறது.
புதுடில்லியில் போராட்டம் நடத்த முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் தலைமையில் காங்கிரசார் சென்றுள்ளனர்.
கர்நாடக பா.ஜ., - எம்.பி.,க்களை காட்டு மிராண்டிகள், ஆண்மை இல்லாதவர்கள் என்கின்றனர். ஆனால், போராட்டத்துக்கு வாருங்கள் என பா.ஜ., - ம.ஜ.த.,வினருக்கு கடிதம் எழுதி உள்ளனர். கேரளாவில் ஒத்துழையாமை; கர்நாடகாவில் ஒத்துழைப்பு. இதுதான் கொள்கையா.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

