மாண்டியாவில் ரூ.2 கோடியில் வீடு தேர்தல் பணியை துவங்கிய 'ஸ்டார்' சந்துரு
மாண்டியாவில் ரூ.2 கோடியில் வீடு தேர்தல் பணியை துவங்கிய 'ஸ்டார்' சந்துரு
ADDED : மார் 21, 2024 03:08 AM

மாண்டியா: மாண்டியா லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் 'ஸ்டார்' சந்துரு, நகரில் இரண்டு கோடி ரூபாயில் புதிய வீடு வாங்கி, கிரஹ பிரவேசம் நடத்தி உள்ளார். அந்த வீட்டில் இருந்தே, தேர்தல் பணிகளையும் துவங்கி உள்ளார்.
சர்க்கரை நாடு என்று அழைக்கப்படும் மாண்டியா லோக்சபா தொகுதியில், காங்கிரஸ், ம.ஜ.த., கட்சிகள் மாறி, மாறி வெற்றி பெற்று வந்தன. 2019 தேர்தலில் காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
கூட்டணி வேட்பாளராக குமாரசாமியின் மகன் நிகில் போட்டியிட்டார். பா.ஜ., ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட சுமலதா வெற்றி பெற்றார்.
வரும் லோக்சபா தேர்தலில், ம.ஜ.த., பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. கூட்டணி வேட்பாளராக, குமாரசாமி போட்டியிடலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் ஏற்கனவே வேட்பாளரை அறிவித்துவிட்டது.
மாண்டியாவின் நாகமங்களாவை சேர்ந்த, பிரபல தொழில் அதிபர் வெங்கடரமணேகவுடா என்கிற ஸ்டார் சந்துரு போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், மாண்டியா பந்திகவுடா லே - அவுட்டில் 2 கோடி ரூபாயில், ஸ்டார் சந்துரு வீடு வாங்கினார். அந்த வீட்டின் கிரஹ பிரவேசம் நேற்று நடந்தது.
மாண்டியா மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர். கிரஹ பிரவேசம் முடிந்ததும், பிரசாரம் குறித்து எம்.எல்.ஏ.,க்களுடன், ஸ்டார் சந்துரு ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில், ''மாண்டியா தொகுதியில் வெற்றி பெற்று, எம்.பி., ஆவேன் என்ற நம்பிக்கை உள்ளது. என்னை எதிர்த்து யார் போட்டியிட்டாலும், எனக்கு பிரச்னை இல்லை. எதிரியாளியை எதிர்கொள்ள தயார்.
நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன். கஷ்டப்பட்டு சம்பாதித்து முன்னேறி உள்ளேன். ஏழைகள், விவசாயிகள் படும் கஷ்டம் எனக்கு தெரியும். மாண்டியா மக்களின் மகனாக இருக்க விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது, மாண்டியாவில் சொந்த வீடு வாங்குவதாக, நிகிலும், சுமலதாவும் கூறி இருந்தனர். ஆனால் அவர்கள் இப்போது வரை, வீடு வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

