இன்ப நாதம் அளிக்கும் 'ஸ்ரீமிருது' காலத்துக்கு ஏற்ப மாற்றத்துடன் தயாரிப்பு
இன்ப நாதம் அளிக்கும் 'ஸ்ரீமிருது' காலத்துக்கு ஏற்ப மாற்றத்துடன் தயாரிப்பு
ADDED : செப் 21, 2024 11:15 PM
பாலக்காடு:கலை உலகுக்கு, 'ஸ்ரீமிருது' என்ற புதிய வாத்தியக்கருவியை, குழல்மன்னம் ராமகிருஷ்ணன், வடிவமைத்து சாதித்துள்ளார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் குழல்மன்னம் ராமகிருஷ்ணன். பிரபல மிருதங்க வித்வானான இவர், கின்னஸ் உட்பட பல சாதனைகள் படைத்தவர். இந்நிலையில், கலை உலகிற்கு ஸ்ரீமிருது என்ற புதிய வாத்திய கருவியை வடிமைத்து சாதனை படைத்து உள்ளார்.
இதுகுறித்து, குழல்மன்னம் ராமகிருஷ்ணன் கூறியதாவது:
கச்சேரிகளுக்கு செல்லும் போது, மிருதங்கத்தை ஏற்றிச்செல்வதில் சிரமம் இருப்பதை நன்கு அறிவேன். ஒரு மிருதங்கம், 10 கிலோ முதல் 15 கிலோ வரை எடை இருக்கும். இதன் எடையை எப்படி குறைக்கலாம் என சிந்தித்தேன்.
பயணம் செய்யும் போது, எடுத்துச் செல்ல வசதியாக புதிய வாத்திய கருவி குறித்து ஓராண்டுக்கு மேலாக ஆய்வு செய்து வந்தேன். அப்படித்தான் ஸ்ரீமிருது என்ற புதிய வாத்திய கருவியை வடிவமைத்தேன்.
மிருதங்கத்தின் அதே நாத இன்பம் அளிக்கும் இந்த புதிய கருவி, காலத்திற்கு ஏற்ப தயார் செய்துள்ளேன். மிருதங்கத்தின் நடுவே உள்ள மர தடிக்கு பதிலாக, ஸ்ரீமிருதுவில் செயற்கை ரப்பர், பைபர் மற்றும் ஸ்டீல் பயன்படுத்தி எடையை குறைத்தேன். தோலுக்கு பதிலாக இரு புறமும் பைபர் பயன்படுத்தி உள்ளேன்.
பெங்களூருவை மையமாக கொண்டு செயல்படும், 'காருண்யா மியூசிக்கல்' வரதராஜனின் உதவியுடன் இதை தயாரித்தேன். அவர் தான் இதற்கு ஸ்ரீமிருது என்ற பெயர் சூட்டினார்.
மூன்று பகுதிகளாக பிரிக்க கூடிய இந்த வாத்திய கருவியின் எடை, 5 கிலோ மட்டுமே. ஒரு முறை மேடையில் இதை கழுத்தில் போட்டு வாசித்தேன். சமூக ஊடகத்தில் பரவிய அந்தப் புகைப்படம் பெரும் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் வழிவகுத்தது.
மிருதங்கத்துக்கு பதிலான ஒரு வாத்திய கருவி அல்ல இது. புதிய வாத்திய கருவியாக, ஓராண்டாக பல்வேறு மேடைகளில் சோதனை செய்த பிறகே, அறிமுகம் செய்கிறேன். இதற்கு காப்புரிமை கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

