ADDED : பிப் 26, 2024 07:08 AM

ஷிமொகா: ''அனைத்து கட்சி தொண்டர்களும் காங்கிரசில் இணையலாம்,'' என மாநில காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான சிவகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.
ஷிவமொகாவில் அவர் அளித்த பேட்டி:
மாநிலம் முழுதும் காங்கிரசின் சித்தாந்தத்துடன் உடன்படும் யார் வேண்டுமானாலும் எங்கள் கட்சியில் சேரலாம். அனைத்து கட்சி தொண்டர்களும் காங்கிரஸ் கட்சிக்கு வாருங்கள்.
நேரத்தையும், வயதையும் வீணாக்க வேண்டாம். எனக்கு இப்போது 62 வயதாகிறது. எனவே நல்ல முடிவெடுங்கள். பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., குமார் பங்காரப்பாவை கட்சியில் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
கோவில்களுக்கு உதவும் வகையில் புதிய மசோதாவை நிறைவேற்ற முயற்சித்தோம். ஆனால், மேலவையில் நிறைவேற்றப்படவில்லை. அர்ச்சர்களுக்கு நல்லது செய்ய போகிறோம். ஆனால் இரண்டு கட்சிகளும் எதிர்க்கின்றன.
கோவிலை மீட்க முயற்சி செய்தோம். பா.ஜ., மதம் மற்றும் கோவில்களுக்கு எதிரானது என்பதை அவர்களே நிரூபித்து உள்ளனர். மசோதாவை நிறைவேற்றுவதை யாராலும் தடுக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இத்தனை நாட்களாக மற்ற கட்சி எம்.எல்.ஏ., க்கள், தலைவர்களை கட்சிக்கு அழைப்பதாக சிவகுமார் பேசி வந்தார். ஆனால் தற்போது, மற்ற கட்சி தொண்டர்களை காங்கிரசில் சேர அழைப்பு விடுத்துள்ளார்.
தலைவர்கள் போன்று தொண்டர்களும் காங்கிரசில் இணைவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

