ADDED : செப் 27, 2024 08:04 AM

பெங்களூரு: ''சித்தராமையாவின் 40 ஆண்டு கால அரசியலில், ஒரு கரும்புள்ளி கூட கிடையாது. ஆனால், இப்போது அவரது முழு உடையும், கருப்பு மையாக மாறியுள்ளது. எனவே அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்,'' என ராஜ்யசபா பா.ஜ., - எம்.பி., ஜக்கேஷ்வலியுறுத்தினார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
முதல்வர் சித்தராமையா மிகவும் துாய்மையான தலைவர் என, நான் நினைத்திருந்தேன்.
இப்போது அவர் மீது, 'மூடா' முறைகேடு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சித்தராமையா செய்தது தவறு என நீதிமன்றமும் கூறியுள்ளது. எனவே அவர், பெரிய மனதுடன் முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும்.
மூடா முறைகேடு மூலமாக, தேசிய, சர்வதேச அளவில் கர்நாடகாவுக்கு அவப்பெயரை சித்தராமையா ஏற்படுத்தி உள்ளார். மாநிலத்தின் மானம், மரியாதை ஏலம் விடப்பட்டது. அவர் ராஜினாமா செய்துவிட்டு, விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். நிரபராதியாக வெளியே வரட்டும்.
சித்தராமையாவின் 40 ஆண்டுகால அரசியலில், ஒரே ஒரு கரும்புள்ளி கூட இருந்ததில்லை. ஆனால் இப்போது அவரது முழு உடையும், கருப்பு மையாக மாறியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

