தலைமறைவாக இருக்கும் பிரஜ்வலுக்கு... ஷோகாஸ் நோட்டீஸ்! அதிரடி காட்டும் வெளியுறவு துறை
தலைமறைவாக இருக்கும் பிரஜ்வலுக்கு... ஷோகாஸ் நோட்டீஸ்! அதிரடி காட்டும் வெளியுறவு துறை
ADDED : மே 25, 2024 05:12 AM

பெங்களூரு : பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று பதுங்கி இருக்கும், ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு, வெளியுறவுத் துறை அமைச்சகம், 'ஷோகாஸ் நோட்டீஸ்' அனுப்பி உள்ளது. பாஸ்பார்ட் ரத்து செய்வதன் முதல்கட்ட நடைமுறையாக, இது பார்க்கப்படுகிறது.
ஹாசன் ம.ஜ.த., - எம்.பி.,யாக இருப்பவர் பிரஜ்வல் ரேவண்ணா, 33. அவர் லோக்சபா தேர்தலில் மீண்டும் போட்டியிட்டுள்ளார். இவர், சில பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
ஏப்ரல் 26ம் தேதி ஓட்டுப் போட்ட பின், ஜெர்மனிக்குத் தப்பிச்சென்றார். அதன் பின், துபாயில் இருந்து பெங்களூரு வருவதற்கு இரண்டு முறை விமான டிக்கெட் முன்பதிவு செய்தும், இறுதியில் ரத்து செய்துவிட்டார்.
குற்றச்சாட்டு
பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில், அவர் மீது பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்கை விசாரித்து வரும், சிறப்பு புலனாய்வு குழு மூன்று முறை நோட்டீஸ் அனுப்பியும், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
தற்போது பிரஜ்வல் எங்கு இருக்கிறார் என்ற தகவல் வெளியாகவில்லை. அவரை கண்டுபிடிக்கும்படி, சி.பி.ஐ., வாயிலாக 'ப்ளு கார்னர் நோட்டீஸ்' அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும் அவரைப் பற்றிய தகவல் இல்லை.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ், பா.ஜ., - ம.ஜ.த., கட்சித் தலைவர்கள் பரஸ்பரம் அரசியல் ரீதியாக குற்றஞ்சாட்டிக் கொள்கின்றனர்.
இதைத் தொடர்ந்து எந்த நாட்டில் இருந்தாலும், பெங்களூருக்கு வந்து, சிறப்பு விசாரணை குழு முன் ஆஜராகி, விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி, முன்னாள் முதல்வர் குமாரசாமி, இரண்டு முறை அழைப்பு விடுத்தார்.
தன் மீது மரியாதை இருந்தால், உடனடியாக வரும்படி, முன்னாள் பிரதமர் தேவக-வுடாவும் எச்சரிக்கை விடுத்தார்.
முதல்வர் கடிதம்
இதற்கிடையில், அவரது துாதரக பாஸ்போர்ட் ரத்து செய்யும்படி, சிறப்பு விசாரணை குழு, வெளியுறவுத் துறைக்குக்கு கடந்த வாரம் கடிதம் எழுதியது. பாஸ்போர்ட் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கும்படி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் சித்தராமையாவும் நேற்று முன்தினம் கடிதம் எழுதினார்.
இந்நிலையில், பிரஜ்வலுக்கு இ - மெயில் வாயிலாக வெளியுறவுத் துறை அமைச்சகம், நேற்று, சோகாஸ் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அதில், வெளிநாட்டுக்கு செல்ல என்ன காரணம்? தங்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக்கு எப்போது ஆஜராவீர்கள்? தங்கள் பாஸ்போர்ட்டை ஏன் ரத்து செய்ய கூடாது உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சட்டப்படி நடவடிக்கை
இது பாஸ்போர்ட் ரத்து செய்வதற்கான நடைமுறையின் முதல் கட்டம் என்று தகவல் வெளியாகி உள்ளது. பிரஜ்வல் தரப்பில் பதில் வரவில்லை என்றால், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
பாஸ்போர்ட் ரத்து செய்யும்பட்சத்தில், அவர் வெளிநாட்டில் இருக்க முடியாது. தாய் நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்பது விதிமுறை.
மேலும், அவர் தங்கி இருக்கும் நாட்டின் அரசு மூலம், சட்டப்படி நடவடிக்கை எடுக்க, இந்திய அரசு பரிந்துரைக்கும் வாய்ப்பும் உள்ளது.
25_HDK JDS
நானும் வழக்கறிஞராக இருந்தேன் என்று சித்தராமையா அடிக்கடி சொல்கிறார். ஆபாச வீடியோ வெளியிட்டு பெண்களை ஆமானுஷயமாக காண்பித்தது மனிஷத்துவமா? இது தவறு இல்லை என்று சொல்லும் நீங்கள், இனி வழக்கறிஞராக இருந்தேன் என்று சொல்ல வேண்டாம்.
குமாரசாமி, முன்னாள் முதல்வர், ம.ஜ.த.,

