அஜித்பவார் அணி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கமா?: சபாநாயகர் மறுப்பு
அஜித்பவார் அணி எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கமா?: சபாநாயகர் மறுப்பு
ADDED : பிப் 15, 2024 07:34 PM

மும்பை: மஹாராஷ்டிராவில் துணை முதல்வர் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்., எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் ராகுல் நர்வேக்கர் மறுத்தார்.
மஹாராஷ்டிராவில் பிரதான எதிர்கட்சியான சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்., கட்சியில் பிளவு ஏற்பட்டது. அக்கட்சியின் மூத்த தலைவர் அஜித்பவார் தன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பா.ஜ. , கூட்டணியில் இணைந்து, துணை முதல்வராக அஜித்பவார் பதவியேற்றார்.இதையடுத்து கட்சி இரண்டாக உடைந்தது.
கட்சி, சின்னம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்ட வழக்கில், அஜித்பவார் தலைமையிலான கட்சியே உண்மையான தேசியவாத காங்., எனவும் கட்சி சின்னம், கொடி ஆகியவை அஜி்த்பவார் அணிக்கே என தீர்ப்பளித்தது.
முன்னதாக அஜித்பவார் ஆதரவு 41 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என சபாநாயகருக்கு சரத்பவார் அணி தரப்பு மனு தாக்கல் செய்தது.இதனை விசாரித்த சபாநாயகர் ராகுல் நர்வேக்கர், தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்த பின் தமக்கு அதிகாரமில்லை என கூறி தகுதி நீக்கம் செய்ய மறுத்து மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

