சந்தேஷ்காலி வில்லன் ஷாஜகானின் சி.பி.ஐ., காவல் மார்ச் 14 வரை நீட்டிப்பு
சந்தேஷ்காலி வில்லன் ஷாஜகானின் சி.பி.ஐ., காவல் மார்ச் 14 வரை நீட்டிப்பு
ADDED : மார் 10, 2024 03:54 PM

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் பாலியல் வன்கொடுமை, நில அபகரிப்பு உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சஸ்பெண்ட் செய்யப்பட்ட திரிணமுல் காங்கிரஸ் பிரமுகர் ஷேக் ஷாஜகானின் சி.பி.ஐ., காவலை மார்ச் 14ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் சந்தேஷ்காலி கிராமம் உள்ளது. ரேஷன் வினியோக மோசடி வழக்கு தொடர்பாக இந்தப் பகுதியின் திரிணமுல் காங்., பிரமுகர் ஷாஜஹான் ஷேக்கிடம் விசாரிக்க அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்றனர். ஆனால், ஷேக்கின் ஆதரவாளர்கள், அமலாக்கத் துறை அதிகாரிகளை தாக்கினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் தலைமறைவானார். இதைத் தொடர்ந்து, அவர் மீது பல்வேறு புகார்கள் வெளிவரத் துவங்கின.
ஷேக் ஷாஜஹான் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அப்பகுதியை சேர்ந்த பழங்குடியினரின் நிலங்களை அபகரித்ததுடன், பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. பல்வேறு தரப்பு பெண்கள் புகார் கூறியதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரணை நடத்த கோரி கோல்கட்டா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நீதிபதிகள் ஹரீஷ் டாண்டன், ஹிரன்மே பட்டாச்சார்யா ஆகியோர் வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற உத்தரவிட்டனர். அதன்படி சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஷேக் ஷாஜகானின் சி.பி.ஐ., காவலை மார்ச் 14ம் தேதி வரை நீட்டித்து மேற்கு வங்க மாநிலம் பாசிர்ஹாட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

