வம்பை விலை கொடுத்து...
கர்நாடகாவுல ஆட்சியில இருக்குற, கை கட்சிக்காரங்க ஏதாவது எடக்கு, மடக்கா பேசுனா, அத வைச்சு அரசியல் பண்ணுறதுக்கு, தாமரை, புல்லுக்கட்டுக்காரங்க ரெடியா இருக்காங்க. இது தெரிஞ்சும், கை கட்சிக்காரங்களுக்கு வாய் அதிகரிச்சு இருக்கு. ஏதாவது தினமும் சர்ச்சைக்குரிய வகையில பேசி, வம்ப விலை கொடுத்துட்டு வாங்குறாங்க. இதனால முதல்வருக்கு தலைவலி ஏற்பட்டு இருக்காம். ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிய, எப்படி நிறைவேத்துறதுன்னு தடுமாறிட்டு வர்றாரு. இந்த நேரத்துல கட்சிக்காரங்களும் அவர படாய்படுத்தி வர்றாங்க.
தேவையில்லாத பேச்சு!
கர்நாடகா தாமரை கட்சி தலைவரு பொறுப்பு ஏத்து, இன்னும் ஆறு மாசம் கூட ஆகல. அதுக்குள்ள எம்.எல்.ஏ., ஒருத்தரு, மாநில தலைவரு தான் அடுத்த முதல்வர்னு, கொடி பிடிக்க ஆரம்பிச்சி இருக்காரு. இதனால தாமரை கட்சி, மூத்த தலைகட்டு எல்லாம் கடுப்பாயி இருக்காங்க. கஷ்டப்பட்டு நாலு, ஐஞ்சு தடவ ஜெயிச்ச எங்களுக்கே சில நேரத்துல, அமைச்சர் பதவி கிடைக்குறது இல்ல. முதல் தடவை ஜெயிச்ச உடனே, முதல்வர் பதவிய துாக்கி கொடுக்கணுமா. தேவையில்லாம கொடி பிடிக்காதன்னு, அந்த எம்.எல்.ஏ., வ வசைபாடி இருக்காங்களாம்.
வாங்கிட்டு வந்த வரம்்!
தங்க சுரங்கம் இருக்குற மாவட்டத்துல, ஆறு சட்டசபை தொகுதி இருக்கு. இதுல நான்கு பேர் கைகட்சி எம்.எல்.ஏ.,க்கள். இரண்டு பேரு புல்லுக்கட்டுக்காரங்க. இந்நிலையில தங்க சுரங்க மாவட்ட எம்.எல்.ஏ.,க்களுக்கு, மாநில அரசு நிதி ஒதுக்கி இருக்காங்க. கை கட்சி எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிக்கு கோடிக்கணக்கிலும், புல்லுக்கட்டு எம்.எல்.ஏ.,க்களுக்கு லட்சக்கணக்கிலும் கொடுத்து இருக்காங்க. இதுக்கு புல்லுக்கட்டு எம்.எல்.ஏ., அதிருப்தி தெரிவிச்சி இருக்கு. நான் வாங்கிட்டு வந்த வரம் அப்படி. ஒண்ணும் செய்ய முடியாதுன்னு, மனக்குமுறலை கொட்டி தீர்த்து இருக்காரு.

