''டாக்ஸியில் செல்ல ரூ.500 அனுப்புங்க'': உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பெயரில் மோசடி
''டாக்ஸியில் செல்ல ரூ.500 அனுப்புங்க'': உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பெயரில் மோசடி
UPDATED : ஆக 27, 2024 06:06 PM
ADDED : ஆக 27, 2024 05:56 PM

புதுடில்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பெயரில் மோசடி நபர் ஒருவர், போலி கணக்கு துவங்கி, 'டாக்ஸியில் செல்ல ரூ.500 அனுப்புங்கள். நீதிமன்றம் சென்ற பிறகு பணத்தை திருப்பி அனுப்புகிறேன்' எனக் கூறி மெசேஜ் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.
மோசடிகள் பல விதங்களில் நடந்துக்கொண்டிருக்கும் சூழலில், இன்றைய நவீன உலகில், குறிப்பிட்ட நபரை போன்று சமூக வலைதளங்களில் போலி 'ஐ.டி' உருவாக்கி, அதை வைத்து மற்றவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி நவீன மோசடியில் ஈடுபடும் நிகழ்வுகளும் நடக்கிறது. இவ்வகையான மோசடிகளில் சிறிய அளவிலான தொகைகளே இழக்கப்படுவதால் வெளியுலகிற்கு பெரும்பாலும் தெரிவதில்லை.
அந்த வகையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் டி.ஒய்.சந்திரசூட் பெயரிலேயே மோசடி நடைபெற்றது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கைலாஷ் மேக்வால் என்பவர் தனக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் என்ற பெயரில் இருந்து பணம் கேட்டு குறுஞ்செய்தி வந்ததாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவுடன், தான் பெற்ற குறுஞ்செய்தியின் ஸ்க்ரீன்ஷாட்டையும் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், மோசடி நபர் தன்னை தலைமை நீதிபதி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, தான் அவசரக் கூட்டதிற்கு சென்றுகொண்டிருப்பதாகவும், ஆனால் டில்லியின் கனாட் பிளேஸில் மாட்டிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் டாக்ஸியில் (கேப்) செல்வதற்காக ரூ.500 தேவை என்றும், நீதிமன்றத்திற்கு சென்ற பிறகு பணத்தை திருப்பி தருவதாகவும் உறுதியளித்துள்ளார் அந்த மோசடி நபர். மேலும் முடிவில், உரையை உண்மையானதாக மாற்ற, “ஐபாடில் இருந்து அனுப்புகிறேன்” என்றும் மோசடி நபர் தெரிவித்துள்ளார். இந்த பதிவு வைரலாகியுள்ளது.

