தேர்தல் பத்திரங்கள் விபரம் தாக்கல் செய்தது எஸ்.பி.ஐ.,
தேர்தல் பத்திரங்கள் விபரம் தாக்கல் செய்தது எஸ்.பி.ஐ.,
ADDED : மார் 13, 2024 01:06 AM
புதுடில்லி, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து தகவல்களையும், எஸ்.பி.ஐ., எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி, தேர்தல் கமிஷனிடம் நேற்று ஒப்படைத்தது.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் வகையில் தேர்தல் பத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
இதன்படி, தனிநபர்கள், நிறுவனங்கள், தேர்தல் பத்திரங்களை வாங்கி, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்க முடியும்.
கடந்த 2018ல் இருந்து, 30 தவணைகளில், 16,518 கோடி ரூபாய் மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை, இந்த திட்டத்தை செயல்படுத்தும் எஸ்.பி.ஐ., விற்றுள்ளது.
இந்த திட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது சட்டவிரோதமானது என்று அறிவித்தது.
மேலும், நன்கொடையாளர்கள் குறித்த விபரங்களை எஸ்.பி.ஐ., அளிக்க வேண்டும் என்றும், அதை தேர்தல் கமிஷன், தன் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த தகவல்களை அளிக்க, ஜூன் 30ம் தேதி வரை அவகாசம் கேட்டு, எஸ்.பி.ஐ., தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
மேலும், நேற்று மாலைக்குள், அனைத்து தகவல்களையும் தேர்தல் கமிஷனில் ஒப்படைக்க உத்தரவிட்டது.
இந்தத் தகவல்களை, தேர்தல் கமிஷன் 15ம் தேதி மாலைக்குள் இணையதளத்தில் வெளியிடவும் உத்தரவிட்டது.
இதன்படி, தேர்தல் பத்திரங்கள் விற்பனை, அதில் எவ்வளவு பணமாக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட தகவல்களை, தேர்தல் கமிஷனில் நேற்று மாலை எஸ்.பி.ஐ., அளித்தது. இதை உறுதி செய்து, தேர்தல் கமிஷன், சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

