' வீட்டில் இருந்தது போன்ற உணர்வு': பாக்., பயணம் குறித்த சாம்பிட்ரோடா கருத்தால் சர்ச்சை
' வீட்டில் இருந்தது போன்ற உணர்வு': பாக்., பயணம் குறித்த சாம்பிட்ரோடா கருத்தால் சர்ச்சை
ADDED : செப் 19, 2025 04:54 PM

புதுடில்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும், ராகுலுக்கு மிகவும் நெருக்கமானவருமான சாம் பிட்ரோடா பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: என்னை பொறுத்தவரை நமது அண்டைநாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வெளியுறவுக் கொள்கை இருக்க வேண்டும். நமது அண்டை நாடுகளுடன் உண்மையிலேயே உறவை வளர்த்துள்ளோம். நான் பாகிஸ்தானில் இருந்துள்ளேன். அப்போது வீட்டில் இருந்த போன்ற உணர்வு ஏற்பட்டது. நேபாளம், வங்கதேசத்திலும் இருந்துள்ளேன்.அப்போது எல்லாம், வெளிநாட்டில் இருந்தது போன்ற உணர்வு ஏதும் ஏற்பட்டது இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடத்திய பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, 'ஆப்பரேஷன் சிந்தூர்' மூலம் இந்தியா பதிலடி கொடுத்தது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில், பாகிஸ்தானை புகழ்ந்து பேசுவது போன்று பிட்ரோடா பேசியுள்ளது அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.