சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை திறமையாக கையாள்கிறது கேரள அரசு: சேகர்பாபு பேட்டி
சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை திறமையாக கையாள்கிறது கேரள அரசு: சேகர்பாபு பேட்டி
ADDED : ஜன 11, 2024 12:49 PM

சென்னை: சபரிமலையில் வரும் பக்தர்கள் கூட்டத்தை கேரள அரசு திறமையாக கையாள்கிறது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இது குறித்து சேகர்பாபு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: சபரிமலையில் கூட்ட நெரிசல் தொடர்பாக கேரள தலைமைச் செயலருக்கு தமிழக தலைமைச் செயலர் கடிதம் எழுதியுள்ளார். அதேபோல் தமிழக முதல்வர் ஸ்டாலினும் கேரள அரசிடம் தமிழகத்தில் இருந்து வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளும், பாதுகாப்பு வசதிகளும் செய்து தரும்படி கேட்டு கொண்டுள்ளார். முதல்வர் உத்தரவின் பேரில் கேரள தேவசம் போர்டு அமைச்சரிடம் பேசியிருக்கிறேன்.
பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வலியுறுத்துகிறோம். பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் விரைவாக வழிபட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்கள். சபரிமலையில் வரும் பக்தர்கள் கூட்டத்தை கேரள அரசு திறமையாக கையாள்கிறது. பெருமளவு பக்தர்களின் எண்ணிக்கை இருக்கும் நிலையிலும், பெரும் அசம்பாவிதம் நடக்காமல் கேரள அரசு நடவடிக்கை எடுத்து கொண்டு இருக்கிறது. நான் 45 ஆண்டுகளாக சபரிமலைக்கு செல்கிறேன்.
ஒரு மணி நேரத்திற்கு சுமார் குறைந்தபட்சம் 3500 பேர் தான் தரிசனம் செய்யக் கூடிய சூழல். ஒரு நாளைக்கு சுமார் 18 மணி நேரம் தரிசனம் நடக்கிறது. அதன்படி ஒரு நாளைக்கு 58 ஆயிரம் பேர் தரிசனம் செய்ய முடியும். ஆனால் பக்தர்களின் எண்ணிக்கை கூடும் போது, கூட்டம் நெரிசல் அதிகம் ஏற்பட்டு, தரிசனத்திற்கான கால அவகாசம் நீடிப்பது, இயற்கையாக அமைகிறது. மாலையில் தரிசனம் செய்யும் பக்தர்கள் காலையில் நெய் அபிஷேகம் செய்வதற்காக இரவு அங்கு தங்கும் சூழல் ஏற்படுகிறது.
ஆகவே ஒரு சில நாட்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் சன்னிதானத்தில் இருக்கும் சூழல் ஏற்படுகிறது. இதனால் கூட்டம் நெரிசல் ஏற்படுகிறது. இருந்தாலும் கூட்ட நெரிசலை கேரள அரசு சிறப்பாக கையாண்டு கொண்டு இருக்கிறது. அடுத்து வரும் காலங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்காத சூழல் ஏற்படுத்தப்படும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது. ஆகவே தேவையான முன்னேற்பாடுகளை செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

