சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை: சென்னை ஐஐடி தொடர்ந்து 6வது ஆண்டாக முதலிடம்
சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை: சென்னை ஐஐடி தொடர்ந்து 6வது ஆண்டாக முதலிடம்
UPDATED : ஆக 12, 2024 05:24 PM
ADDED : ஆக 12, 2024 04:43 PM

புதுடில்லி: மத்திய கல்வி அமைச்சகம் 2024ம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் சென்னை ஐ.ஐ.டி., தொடர்ந்து 6வது ஆண்டாக முதலிடம் பிடித்தது.
மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் உயர்கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசைப் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்த செயல்பாடு, பல்கலைக்கழகம், கல்லூரி, பொறியியல், நிர்வாகம், மருத்துவம், ஆராய்ச்சி, வேளாண்மை, கண்டுபிடிப்பு உள்ளிட்ட 16 பிரிவுகளில் உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை உருவாக்கப்படுகிறது. கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி, புதுமை நடைமுறை, மாணவர்களின் கல்வித்தரம் என பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்த தரவரிசை தயாரிக்கப்படுகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஆக.,12) வெளியிடப்பட்டது. அதில் ஒட்டுமொத்த செயல்பாட்டுப் பிரிவில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து 6வது ஆண்டாக இக்கல்வி நிறுவனம் முதலிடம் பிடித்து வருகிறது. பெங்களூரு ஐஐஎஸ்சி நிறுவனம் 2ம் இடத்தையும், மும்பை ஐஐடி 3வது இடத்தையும், டில்லி ஐஐடி 4ம் இடத்தையும் பிடித்துள்ளன.
பொறியியல் கல்லூரிகள் தரவரிசையில் சென்னை ஐஐடி முதலிடத்தையும், டில்லி ஐஐடி 2வது இடத்தையும், மும்பை ஐஐடி 3வது இடத்தையும் பிடித்துள்ளன. மாநில பல்கலைக்கழகங்களில் சென்னை அண்ணா பல்கலை முதலிடத்தையும், மேற்குவங்கத்தின் ஜாதவ்பூர் பல்கலை 2வது இடத்தையும் பிடித்துள்ளது. மருத்துவக் கல்லூரிகளுக்கான தரவரிசையில் டில்லி எய்ம்ஸ் முதலிடத்தை பிடித்தது. வேலூர் சிஎம்சி 3வது இடமும், புதுச்சேரி ஜிப்மர் 5வது இடமும் பிடித்தது.

