ஏட்டிக்குப் போட்டி விமர்சனங்களுக்கு காங்கிரசில் 'தடா' அரசியல் அதிகாரத்தை எதிர் நோக்கி காத்திருக்கும் ரமேஷ்குமார்
ஏட்டிக்குப் போட்டி விமர்சனங்களுக்கு காங்கிரசில் 'தடா' அரசியல் அதிகாரத்தை எதிர் நோக்கி காத்திருக்கும் ரமேஷ்குமார்
ADDED : பிப் 09, 2024 07:29 AM

கோலார் லோக்சபா தொகுதியில் காங்கிரசார் ஒருவர் மீது ஒருவர் ஏட்டிக்குப் போட்டியாக பேச விடாமல் தடுக்க, கர்நாடக காங்., தலைமை வாய்க்கு பூட்டு போட்டுள்ளார். குறிப்பாக முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமாரை வாய் திறக்காத படி அடக்கி வைத்துள்ளது.
கர்நாடகா காங்கிரசில் முதல்வர் சித்தராமையா அணி, துணை முதல்வர் சிவகுமார் அணியென உள்ளது. பதவி ஏற்றதில் இருந்தே வெளிப்பட துவங்கியது.
கர்நாடகாவின் முக்கிய லோக்சபா தொகுதிகளில் ஒன்றான கோலாரை சேர்ந்தவர், உணவுத் துறை அமைச்சர் கே.ஹெச்.முனியப்பா. இவர் துணை முதல்வர் சிவகுமார் அணியை சேர்ந்தவர். இவருக்கு எதிரணியில் உள்ளவர், முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார். இவர், முதல்வர் சித்தராமையா அணியில் உள்ளார்.
உள் அர்த்தங்கள்
கடந்த சட்டசபைத் தேர்தலில் ரமேஷ் குமார் தோல்வி அடைந்த பின், அவரது அரசியல் ஈடுபாடு மந்த கதியில் உள்ளது. இதிலும் உள் அர்த்தங்கள் நிறைய உள்ளன. அவரை அடக்கி ஆள்வது முதல்வர் சித்தராமையா என்பது பலருக்கும் தெரியும்.
கடந்த லோக்சபா தேர்தலில் கோலார் லோக்சபா தொகுதியில் காங்., வேட்பாளரான முனியப்பாவை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், காங்கிரஸ் தோல்வியை சந்திக்கும் என்பதை அழுத்தமாக தெரிவித்தவர் ரமேஷ்குமார் தான். அவர் சொன்னது போலவே நடந்தது.
கோலார் லோக்சபா தொகுதிக்குட்பட்ட எட்டு சட்டசபைத் தொகுதிகளிலுமே காங்கிரசின் கே.ஹெச்.முனியப்பாவுக்கு எதிராக இருந்த காங்கிரசாரை ஒன்று கூட வைத்து, தான் நினைத்ததை நடத்தியவர்.
இந்த தேர்தலிலும், ரமேஷ் குமார் அணி கே.ஹெச்.முனியப்பாவுக்கு எதிராக செயல் பட மாட்டார்கள் என்று சொல்ல முடியாது. கோலாரில் முனியப்பாவுக்கு நிகரான ஆற்றல் உள்ள ரமேஷ்குமாரை லேசாக மதிப்பிட முடியாது என்பது மாநில தலைமைக்கும் தெரியும்.
பூஸ்ட்
அவரை சமாதானப் படுத்த வேண்டிய பொறுப்பை, முதல்வர் சித்தராமையா ஏற்றுள்ளார். ஏற்கனவே, முதல்வரின் அரசியல் செயலராக நசிர் அகமது உள்ளதால், தனது அரசியல் அதிகாரத்துக்கு 'பூஸ்ட்' கிடைக்க வேண்டுமானால், ரமேஷ் குமார் தனக்கு சட்ட ஆலோசகராக இருக்க வேண்டும் என விரும்புகிறாராம்.
சட்டசபைத் தேர்தலுக்கு பின், ரமேஷ் குமார் பெட்டி பாம்பாக இருப்பதற்கு, முதல்வர் சித்தராமையாவின் ஆலோசனை தானாம்.
கோலார் லோக்சபா தொகுதியில் சீட் கேளுங்கள் என அவர் யாரையும் உசுப்பேத்தவில்லை என்றே தெரிகிறது. சிலரை உசுப்பேத்தி வருபவர்கள், ரமேஷ் குமாரின் பக்க வாத்தியங்கள் என்று தெரிகிறது.
இதனால், ரமேஷ் குமார் உட்பட பலரையும் தேர்தல் நேரத்தில் குழப்பங்களை ஏற்படுத்தாமல் இருக்க கட்டுப்பாடு என்ற பெயரில் 'தடா' விதித்துள்ளதாக தெரிகிறது.
நேரடியாக சவால்களை சந்திக்கிற ரமேஷ் குமார், 2014 லோக்சபா தேர்தலில் மவுனமாக இருப்பதால் அவருக்கு விரைவில் அரசியல் அதிகாரம், அவரின் வீட்டு கதவை தட்ட உள்ளதாம்.
தனக்கு இடையூறு வரக்கூடாது என்பதற்காக, முனியப்பாவும் தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்த்து வருகிறாராம்-நமது நிருபர் -.

