நாங்க ஏமாற மாட்டோம்; பிரசாத முறையில் மாற்றம் அறிவித்த அயோத்தி ராமர் கோவில்!
நாங்க ஏமாற மாட்டோம்; பிரசாத முறையில் மாற்றம் அறிவித்த அயோத்தி ராமர் கோவில்!
ADDED : செப் 27, 2024 06:27 PM

அயோத்தி: திருப்பதி லட்டு விவகாரத்தில் நடந்த குளறுபடியைத் தொடர்ந்து, அயோத்தி ராமர் கோவில் நிர்வாகம், பிரசாதம் வழங்கும் விவகாரத்தில் அதிரடி முடிவை எடுத்துள்ளது.
உலகளவில் பிரசித்தி பெற்ற திருப்பதி கோவில் பிரசாதமான லட்டில் மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய் பயன்படுத்தப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது.
மேலும், இந்த சம்பவத்தையடுத்து, திருப்பதி கோவிலில் 3 நாள் பரிகார பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து, தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள பிரபலமான கோவில்களில் வழங்கப்படும் பிரசாதங்களின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், உத்தரபிரதேசம் அயோத்தி ராமர் கோவிலில் பிரசாதம் தயாரிக்கும் குழுவை மாற்றி அமைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, அந்த கோவிலின் ராம் ஜென்மபூமி கோவிலின் தலைமை அர்ச்சகர் சத்யேந்திர தாஸ் பேசுகையில், 'கோவில்களுக்கு வழங்கப்படும் நெய்யின் தரம் கவலை அளிக்கிறது. எனவே, கோவில் பிரசாதங்களை வெளியாட்கள் தயார் செய்ய முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. இனிமேல், பிரசாதங்கள் அனைத்தும், கோவில் அர்ச்சகர்களின் முன்னிலையில் மட்டுமே நடக்கும். கோவில் பிரசாதங்களில் தேவையில்லாத பொருட்களை கலப்படம் செய்து, சர்வதேச அளவில் கோவில்களை அவமதிக்கும் முயற்சிகள் நடக்கின்றன,' எனக் கூறினார்.
மதுரா கோவில் நிர்வாகமும் பழங்கள், பூக்கமள் மற்றும் பிற இயற்கை பொருட்களை வைத்து தயாராகும் பிரசாதங்களுக்கு பதிலாக, பழமையான முறையில் பிரசாதங்களை வழங்க முடிவு செய்துள்ளது.
அதேபோல, உத்தரபிரதேசத்தில் உள்ள மன்கமேஸ்வரர் கோவில், அனுமன் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் பிரசாதங்களை தயாரிக்கும் முறைகளிலும் பல கண்டிப்பான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

