UPDATED : ஏப் 03, 2024 01:03 PM
ADDED : ஏப் 03, 2024 12:23 PM

திருவனந்தபுரம்: தொண்டர்கள் புடைசூழ காங்கிரஸ் எம்.பி ராகுல் பேரணியாக சென்று, கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் காங்., பொதுச்செயலாளரும், ராகுலின் சகோதரியுமான பிரியங்காவும் சென்றார்.
கேரளாவில் உள்ள 20 லோக்சபா தொகுதிகளில் 16 தொகுதிகளில் காங்., போட்டியிடுகிறது. இவர்களுக்கு எதிராக முக்கியமாக இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளும் போட்டியிடுகின்றன. வயநாடு தொகுதி காங்., வேட்பாளராக ராகுல் அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்து இந்திய கம்யூ., சார்பில் அதன் பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா போட்டியிடுகிறார். இது இண்டியா கூட்டணியில் நெருடலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தொண்டர்கள் புடைசூழ காங்கிரஸ் எம்.பி ராகுல் பேரணியாக சென்றார். பேரணியில் ராகுலை தொண்டர்கள் வழிநெடுக வரவேற்றனர். ராகுலுடன் அவரது சகோதரியும், கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா, மற்றும் கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் உடன் வந்தனர். பின்னர் ராகுல் தேர்தல் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
தமிழகம் வருகிறார் ராகுல்
தேர்தல் பிரசாரம் செய்ய ஏப்ரல் 12ம் தேதி காங்கிரஸ் எம்.பி ராகுல் தமிழகம் வருகிறார். அவர் ஏப்ரல் 12ம் தேதி திருநெல்வேலியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார். அன்று மாலை கோவையில் நடைபெறும் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உடன் ராகுல் பங்கேற்க உள்ளார்.

