ADDED : ஜன 17, 2024 01:05 AM

அமராவதி, ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன், ஊழல்வாதிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, ஆந்திரா மற்றும் கேரளாவில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். ஆந்திராவின், ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தின் பாலசமுத்திரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தேசிய சுங்கம், மறைமுகவரிகள் மற்றும் போதைபொருள் தடுப்பு அகடமியை நேற்று துவக்கி வைத்தார். அப்போது பிரதமர் பேசியதாவது:
வரி செலுத்துவோரின் பணம் முறையாக பயன்படுத்தப்படுகிறது. வரியாக வசூலிக்கப்படும் அந்த பணம் பல்வேறு வடிவங்களில் மக்களை திரும்ப சென்றடைகிறது.
கடந்த 2014ல் என் தலைமையிலான அரசு பதவியேற்ற பின் நாட்டு மக்களின் 2.5 லட்சம் கோடி ரூபாய் வரிப்பணம் சேமிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஆவணங்களில் இருந்து 10 கோடி போலி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இன்று மத்திய அரசு அனுப்பும் ஒவ்வொரு பைசாவும் சம்பந்தப்பட்ட பயனாளியின் வங்கி கணக்கில் நேரடையாக செலுத்தப்படுகிறது.
ஊழலுக்கு எதிராகவும், ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் இந்த அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. வரிகளில் பல்வேறு சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக லேபாக்சியில் உள்ள வீரபத்ர கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.

