10 ஆண்டு ஆட்சி வெறும் 'டிரெய்லர்' தான் இனி வரப்போவது தான் சாதனைகள் பிரதமர் மோடி உறுதி
10 ஆண்டு ஆட்சி வெறும் 'டிரெய்லர்' தான் இனி வரப்போவது தான் சாதனைகள் பிரதமர் மோடி உறுதி
ADDED : மார் 13, 2024 01:55 AM

ஆமதாபாத், ''கடந்த, 10 ஆண்டுகளில் நாங்கள் செய்த வளர்ச்சி பணிகள் வெறும் டிரெய்லர் தான். வளர்ந்த நாடு இலக்கை எட்ட, வரும் ஆண்டுகளில் வளர்ச்சி பணிகளில் சாதனை புரியப்படும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
குஜராத்தின் சபர்மதியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 85,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ரயில்வே திட்டங்கள் உட்பட நாடு முழுதும், 1.06 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
நாட்டின் வளர்ச்சியில் ரயில்வேயின் பங்களிப்பு மிகப் பெரியது. ஆனால், இதற்கு முன் அதற்கு முக்கியத்துவம் தரப்படாமல் இருந்தது. குறிப்பிட்ட சில அரசியல் தலைவர்களை திருப்திபடுத்தும் வகையில், குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டுமே ரயில்வே பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த 2014ம் ஆண்டுக்கு முன், ஒரு குறிப்பிட்ட ரயில், தங்களுடைய தொகுதிக்கு உட்பட்ட ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டால், எம்.பி.,க்கள் பார்லிமென்டில் வரவேற்று ஆர்ப்பரிப்பர். இப்படி தான் நிலைமை இருந்தது. ரயில்வேயை ஒட்டுமொத்தமாக மேம்படுத்தவே, அதற்கு அதிக நிதி கிடைக்கவே, பொது பட்ஜெட்டுடன், ரயில்வே பட்ஜெட்டையும் இணைத்தோம்.
தற்போது 'வந்தே பாரத்' போன்ற அதிநவீன ரயில்கள் இயக்கப்படுகின்றன. ரயில்வே நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. ரயில் பாதைகளை விரிவுபடுத்துவது, இரட்டிப்பாக்குவது, மின்மயமாக்குவது என, பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
நாங்கள் வளர்ச்சிப் பணிகளில் காட்டும் வேகத்தை, அரசியலாக்குகின்றனர். தேர்தலுக்காக செய்வதாக கூறுகின்றனர். வளர்ச்சிப் பணிகள் என்பது தற்போது ஒரு இயக்கமாக செயல்படுத்தப்படுகிறது.
கடந்த இரண்டரை மாதங்களில் மட்டும், 11 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை துவக்கியுள்ளோம். இது, இந்தியாவை வளர்ந்த நாடாக்கும் முயற்சியின் ஒரு பகுதி தான்.
கடந்த, 10 ஆண்டுகளில் நடந்தவை எல்லாம், ஒரு டிரெய்லர் தான். 10 ஆண்டுகளுக்கு முன், நாம் பட்ட கஷ்டங்களை, நம்முடைய இளைய தலைமுறையினர் சந்திக்கக் கூடாது என்ற நோக்கத்தோடு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. வளர்ச்சி திட்டங்களில் பல புதிய சாதனைகளை படைப்போம். இதுதான் மோடியின் உறுதிமொழி.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மைசூரு - சென்னை உட்பட 10 புதிய வந்தே பாரத் ரயில்களையும் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாதில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு நேற்று சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள காந்தி சிலைக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.

