பிரதாப் சிம்ஹாவுக்கு 'சீட்' கேட்டு ஆதரவாளர்கள் போராட்டம்
பிரதாப் சிம்ஹாவுக்கு 'சீட்' கேட்டு ஆதரவாளர்கள் போராட்டம்
ADDED : மார் 14, 2024 06:21 AM

மைசூரு : எம்.பி., பிரதாப் சிம்ஹாவுக்கு 'சீட்' வழங்கக் கோரி, மைசூரில் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.
மைசூரு லோக்சபா தொகுதியில் இருந்து, பா.ஜ., சார்பில் இரண்டு முறை எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரதாப் சிம்ஹா. மூன்றாவது முறையாக மைசூரில் போட்டியிட தயாராகி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு, பார்லிமென்டில் இருவர் அத்துமீறி புகுந்தனர். அவர்களுக்கு பிரதாப் சிம்ஹா 'பாஸ்' கொடுத்து இருந்தார். இதை வைத்து காங்கிரஸ் பெரிய அளவில், போராட்டம் நடத்தியது.
இதையடுத்து பிரதாப் சிம்ஹாவுக்கு 'சீட்' கிடைப்பது கஷ்டம் என்று கூறப்பட்டது. கடந்த இரண்டு, மூன்று நாட்களாக மைசூரு தொகுதி பா.ஜ., வேட்பாளர் மன்னர் குடும்பத்தின் யதுவீர் கிருஷ்ணதத்த சாமராஜா உடையாராக இருக்கலாம் என்று, பேச்சு அடிபட்டது.
இதற்கு பிரதாப் சிம்ஹா மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்தார். யதுவீரை கிண்டல் அடிக்கும் வகையிலும் பேசினார். தனக்கே சீட் கிடைக்கும் என்று நம்பிக்கையில் இருந்தார். பிரதாப் சிம்ஹாவுக்கு ஆதரவாக, அவரது தொண்டர்கள் சமூக வலைதள பிரசாரம் செய்தனர். அரசியலுக்கு வர வேண்டாம் என்று, யதுவீரை கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையில், பிரதாப் சிம்ஹாவுக்கு மீண்டும் சீட் வழங்கக் கோரி, மைசூரு இலகல் பகுதியில் நேற்று காலை, அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். பிரதாப் சிம்ஹாவின் படம் இருந்த பதாகைகளை கையில் வைத்தபடி, கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது பெண் தொண்டர் ஒருவர், 'பிரதாப் சிம்ஹா வளர்ச்சிப் பணிகள் செய்து உள்ளார். அவருக்கே சீட் தர வேண்டும்' என, கண்ணீர் விட்டு அழுதார்.
இதற்கிடையில் மைசூரில் பிரதாப் சிம்ஹா அளித்த பேட்டி:
கடந்த 2014 மார்ச் 13ம் தேதி, மைசூரு தொகுதி பா.ஜ., வேட்பாளராக, நான் அறிவிக்கப்பட்டேன். சரியாக இன்று 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. என்னை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்தார்.
பார்லிமென்டிற்குள் நானும், பிரதமர் மோடியும் ஒன்றாக சென்றோம். இது என் வாழ்வில் மறக்க முடியாத தருணம். 10 ஆண்டுகளில் ஏராளமான வளர்ச்சிப் பணிகள் செய்து உள்ளேன். ஒருவேளை கிடைக்காவிட்டால், சுயேச்சையாக போட்டியிட மாட்டேன்.
நான் பிரதமர் மோடியின் தீவிர ரசிகர். சீட் கிடைக்கா விட்டால் எம்.பி.,யாக பணியாற்ற முடியாது. ஆனால் சாதாரண தொண்டனாக பணியாற்றுவேன். எனது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், நேற்று இரவு வெளியான பா.ஜ., பட்டியலில், எதிர்பார்த்தது போலவே பிரதாப் சிம்ஹாவுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. யதுவீர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

