ADDED : பிப் 07, 2024 02:41 AM

பெங்களூரு: பிரபல ஹாக்கி வீரர் வருண்குமார் மீது, பெங்களூரில் போக்சோ பிரிவில் கற்பழிப்பு வழக்கு பதிவாகி உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் வருண்குமார், 28. இந்திய ஹாக்கி அணி வீரர். இந்நிலையில், வருண்குமார் மீது, பெங்களூரை சேர்ந்தவரும், விமான நிறுவன ஊழியருமான 24 வயது இளம்பெண், போலீஸ் நிலையத்தில் அளித்த புகார்:
கடந்த 2018ல் ஹாக்கி பயிற்சிக்காக, கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஞானபாரதியில் உள்ள சாய் டிரெய்னிங் சென்டருக்கு வருண்குமார் வந்தார். அப்போது 17 வயதாக இருந்த எனக்கும் அவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்தோம்.
கடந்த 2019ல், ஜெயநகரில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்து சென்றார். திருமணம் செய்து கொள்வதாக கூறி, என்னுடன் நெருக்கமாக பழகினார். அதன்பின், நான்கு ஆண்டுகள் தொடர்ந்து, திருமண ஆசை காட்டி உறவு கொண்டார்.
ஆனால் 2023ல் இருந்து என்னுடன் பேசுவதை தவிர்த்து வருகிறார். திருமணம் செய்ய மறுப்பதுடன், திருமணத்திற்கு வற்புறுத்தினால் என் ஆபாச படங்களை, சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.
புகாரின்படி, கற்பழிப்பு, மோசடி மற்றும் போக்சோ சட்ட பிரிவுகளில், வருண்குமார் மீது வழக்கு பதிவாகி உள்ளது. அவர் தற்போது ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ளார். விசாரணைக்கு ஆஜராகுமாறு, போலீசார், 'சம்மன்' அனுப்ப உள்ளனர்.

