யமுனை கரையில் ஆக்கிரமிப்பு நவம்பருக்குள் அகற்ற திட்டம்
யமுனை கரையில் ஆக்கிரமிப்பு நவம்பருக்குள் அகற்ற திட்டம்
ADDED : ஜூலை 05, 2025 10:08 PM
புதுடில்லி:யமுனை நதிக்கரையில் ஆக்கிரமிப்புகளை நவம்பர் மாதத்துக்குள் அகற்ற டில்லி அரசு முடிவு செய்துள்ளது.
டில்லி அரசின் தலைமைச் செயலர் தலைமையில், சமீபத்தில் நடந்த கூட்டத்தில் டில்லி ஜல் போர்டு, டில்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், டில்லி மாநகராட்சி, நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை மற்றும் டில்லி மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது, யமுனை நதியை சுத்தம் செய்யும் பணி குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி, யமுனை நதிக்கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நவம்பர் மாதத்துக்குள் அகற்ற முடிவு செய்யப்பட்டது.
யமுனை நதிக்கரையில் கழிவுகளை கொட்டுதல், அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகள் மற்றும் சட்டவிரோத விவசாயம் ஆகியவற்றை அப்புறப்படுத்த தலைமைச் செயலர் அறிவுறுத்தினார்.
டில்லி மேம்பாட்டு ஆணையம், சமீபத்தில் 224 ஏக்கர் நிலத்தை மீட்டு மரக்கன்றுகள் நட்டுள்ளது. அதேபோல, வஜிராபாத் தடுப்பணை மற்றும் காஷ்மீரி கேட் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் ஆகியவை இடையே, யமுனா வனஸ்தலி திட்டத்தின் கீழ், 24 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து டில்லி மேம்பாட்டு ஆணையத்தால் மீட்கப்பட்டுள்ளது.
யமுனை நதி டில்லி வழியாக 52 கி.மீ., துாரம் செல்கிறது. வஜிராபாத் மற்றும் ஓக்லா இடையேயான 22 கி.மீ., துாரத்துக்கு யமுனை நதி மிகவும் மாசுபட்டுள்ளது. யமுனை நதியை துாய்மைப்படுத்த பா.ஜ., அரசின் முதல் பட்ஜெட்டில், 9,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

