ஓட்டு உறுதிச்சீட்டை கையால் எண்ணக்கோரிய மனு தள்ளுபடி
ஓட்டு உறுதிச்சீட்டை கையால் எண்ணக்கோரிய மனு தள்ளுபடி
ADDED : ஏப் 08, 2025 05:33 AM

புதுடில்லி: தேர்தல்களின்போது, வி.வி.பி.ஏ.டி., எனப்படும் ஓட்டு உறுதிச்சீட்டுகளை, 100 சதவீதம் கையால் எண்ண கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
மின்னணு ஓட்டு இயந்திரங்களை பயன்படுத்தி நடக்கும் ஓட்டுப்பதிவின் போது, வாக்காளர் பதிவு செய்த ஓட்டு, குறிப்பிட்ட நபரின் சின்னத்திற்கு தான் சென்றுள்ளது என்ற விபரம், வி.வி.பி.ஏ.டி., எனும் இயந்திரத்தில் சில வினாடிகள் தெரியும். அதன்பிறகு, பதிவான அந்த ஓட்டு விபரம், அந்த பெட்டியில் உள்ளே, துண்டு சீட்டாக விழுந்து விடும். இது, ஓட்டு உறுதிச்சீட்டு என அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், ஹன்ஸ் ராஜ் ஜெயின் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், 'தேர்தல்களின்போது பதிவாகும் ஓட்டுகளின், ஓட்டு உறுதிச்சீட்டை, 100 சதவீதம் கையால் எண்ண வேண்டும்' என கோரப்பட்டிருந்தது.
அதை நேற்று விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையை தள்ளுபடி செய்தனர். அப்போது நீதிபதிகள், 'இந்த விவகாரத்தில் தலையிட போதிய நல்ல அம்சங்கள் ஏதும் இல்லை என்பதால், மனுவை தள்ளுபடி செய்கிறோம்' என்றனர்.
தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, ''இதுபோன்ற விவகாரங்கள் தொடர்பாக, முன்னர் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளோம். மீண்டும் மீண்டும் அதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிக்கத் தேவையில்லை,'' என்றார்.

