பெருமாள் கோவில் ராஜகோபுரம் இன்று சிறப்பு பூஜையுடன் துவக்கம்
பெருமாள் கோவில் ராஜகோபுரம் இன்று சிறப்பு பூஜையுடன் துவக்கம்
ADDED : மார் 08, 2024 11:08 PM

தங்கவயல்: கிட்டத்தட்ட நுாற்றாண்டு பழமை வாய்ந்த, ராபர்ட்சன்பேட்டை கீதா சாலையில் உள்ள ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கட் ரமண சுவாமி கோவிலில், 4 கோடி ரூபாய் செலவில் ராஜ கோபுரம் கட்டும் பணிக்கு இன்று சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
கர்நாடக அரசின் ஹிந்து அறநிலையத் துறைக்கு உட்பட்ட ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவில், 1915ல் அமைக்கப்பட்டது.
இக்கோவிலில் 89 ஆண்டுகளாக பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது.
இக்கோவிலில் ராஜகோபுரம் அமைக்க, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஆர்யா வைஷ்ய மண்டலியின் சேஷ வாகன உற்சவ கமிட்டி தலைவர் பி.ஏ.சந்திரசேகர செட்டி தலைமையில், அனைத்து உற்சவ கமிட்டியினரையும் இணைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதற்கான ராஜகோபுரத்தின் 'மினி மாடல்' உருவாக்கப்பட்டது. அப்போது, 2.45 கோடி ரூபாய் செலவில் ராஜகோபுரம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. சில காரணங்களால் பணிகள் தடைபட்டு நின்றன.
தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா முயற்சியில் ராஜகோபுரம் கட்டுவதற்கு ஹிந்து அறநிலையத் துறை சார்பில், 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, நேற்று ரூபகலா அளித்த பேட்டி:
லட்சுமி வெங்கட் ரமண சுவாமி கோவிலின் பக்தர்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், அரசு நிதியுதவியில் ராஜகோபுரம் அமைக்கப்பட உள்ளது.
இத்திருப்பணியில் கட்சி, மொழி, ஜாதி பாகுபாடின்றி ஒருங்கிணைந்த ஆலோசனைகள் பெற்று நிறைவேற்றப்படும். இதற்கான ஆலோசனை கூட்டம், இன்று காலை 10:30 மணிக்கு கோவில் வளாகத்தில் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

