ஐ.நா., பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் நிச்சயம்: ஜெய்சங்கர்
ஐ.நா., பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் நிச்சயம்: ஜெய்சங்கர்
ADDED : ஏப் 02, 2024 04:52 PM

ஆமதாபாத்: ‛‛ ஐ.நா., பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிச்சயம் நிரந்தர இடம் கிடைக்கும். அதற்கு இந்த முறை கடினமாக உழைக்க வேண்டும்'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் கலந்துரையாடல் நடந்தது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், ஐ.நா., பாதுகாப்பு சபையில், இந்தியாவிற்கு நிரந்தர இடம் கிடைக்குமா என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு ஜெய்சங்கர் அளித்த பதில்: 80 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ஐ.நா., சபையின், பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் கிடைப்பதை 5 நாடுகள் முடிவு செய்கின்றன.அப்போது உலகில் 50க்கும் மேற்பட்ட சுதந்திர நாடுகள் இருந்தன. தற்போது அது 193 ஆக அதிகரித்து உள்ளது. ஆனால், 5 நாடுகள் மட்டுமே தற்போதும் முடிவு செய்கின்றன. அவர்களிடம் ஒரு வாய்ப்பு தாருங்கள் என கேட்பது விசித்திரமானது. இந்த கோரிக்கைக்கு சிலர் ஒப்புதல் தெரிவிக்கின்றனர். முன்னின்று செயல்படுகின்றனர். பிறர் தடையை ஏற்படுத்துகின்றனர். இது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.
ஆனால், தற்போது மாற்றம் தேவை எனவும், இந்தியாவிற்கு நிரந்தர இடம் தர வேண்டும் என உலகம் முழுவதும் குரல் எழுந்துள்ளது. இந்த உணர்வு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. நிச்சயம் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்கும். ஆனால், கடின உழைப்பின்றி எதையும் சாதிக்க முடியாது. நாம் கடினமாக உழைக்க வேண்டும். இந்த முறை, நாம் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும்.
இதற்கான முன்னெடுப்பை இந்தியா, ஜப்பான், ஜெர்மனி மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் ஒன்றாக சேர்ந்து எடுத்து உள்ளன. ஐ.நா.,வுக்கு நாம் அழுத்தம் கொடுக்க வேண்டும். ஐ.நா., சபை பலவீனமாக உள்ளதாக கருத்து எழுந்துள்ளது. உக்ரைன் போர் தொடர்பாக ஐ.நா., சபையில் சிக்கல் உள்ளது. காசா விவகாரத்தில் உறுதியான முடிவு எடுக்க முடியவில்லை. அழுத்தம் அதிகரிக்கும்போது, இந்தியாவிற்கு நிரந்தரமான இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.

