ஏலனஹள்ளி ஏரி ஆக்கிரமிப்பு வீடியோ அதிகாரிகள் மீது மக்கள் கோபம்
ஏலனஹள்ளி ஏரி ஆக்கிரமிப்பு வீடியோ அதிகாரிகள் மீது மக்கள் கோபம்
ADDED : பிப் 06, 2024 11:18 PM

பெங்களூரு : 'கெம்பே கவுடாவால் கட்டப்பட்ட ஏலனஹள்ளி ஏரி, ரயில் எஸ்டேட் தொழிலதிபர்களால் மண், கட்டுமான பொருட்களால் மூடும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பொது மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
கர்நாடக தலைநகர் பெங்களூரு, தோட்ட நகரமாகவும், சிலிக்கான் நகரமாகவும் மாறுவதற்கு முன், ஏரிகளின் நகரமாக இருந்தது. பெங்களூரை உருவாக்கிய கெம்பே கவுடா, இங்கு 300க்கும் மேற்பட்ட ஏரிகளை கட்டி, குடிநீர் வழங்கி, வெள்ள சூழலையும் கட்டுப்படுத்தினார்.
ஆனால், ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, ஏரிகளை ஆக்கிரமித்து பெரிய லே - அவுட்கள், குடியிருப்புகளை கட்டி உள்ளனர்.
பெங்களூரு ஏரிகளை ஆக்கிரமித்தவர்கள், பின் மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து, அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி உள்ளனர். இந்த வீடுகளில் பல தரப்பினரும் வசிக்கின்றனர்.
பின், ஏரி, மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு என கூறி, இடிக்க சென்றால், நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்குகின்றனர். இதனால் அகற்ற முடியாமல் மாநகராட்சி அதிகாரிகள் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர்.
இந்நிலையில், பொம்மனஹள்ளி மண்டலத்துக்கு உட்பட்ட ஏலனஹள்ளி ஏரி அருகில், பெரிய கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
இந்த வீடியோ, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இவ்வளவு பெரிய அளவில் நில அபகரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. ஆனால், நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநகராட்சி அதிகாரிகள் மவுனமாக இருக்கின்றனர்.
இந்த முறைகேட்டில் அவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா.
ஏரியை ஆக்கிரமித்த பின், நீதிமன்றத்துக்கு செல்வதற்கு பதிலாக, முன்னரே இதை தடுக்க வேண்டும். என பொது மக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

