முன்னேறும் நம் முப்படைகள்: கலங்கியது கராச்சி துறைமுகம்
முன்னேறும் நம் முப்படைகள்: கலங்கியது கராச்சி துறைமுகம்
ADDED : மே 09, 2025 05:34 AM

பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்வினையாற்றும் வகையில், நம் ராணுவம், பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து தாக்கி அழித்தது. பாக்., ராணுவம், அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில், நம் முப்படைகளும், பாக்., மீதான தாக்குதலை நேற்று தீவிரப்படுத்தியது.
நேற்றிரவு, கராச்சி துறைமுகம் மீது ஐ.என்.எஸ்., விக்ராந்த் போர்க்கப்பல் வாயிலாக தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த 1971ம் ஆண்டு நடந்த போருக்கு பின், தற்போது கராச்சி துறைமுகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இஸ்லாமாபாத் ராணுவம் தலைமையகம் அருகே நமது ராணுவமும் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியது. இதில், இஸ்லாமாபாத்தின் 16 இடங்களில், தீப்பற்றி எரிவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பாக்., ராணுவ தளபதி ஆசிம் முனீர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஷம்ஷாத் மிஸ்ரா என்பவர் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பாக் பிரதமர் தனது குடும்பத்தினருடன், பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இதற்கிடையே, பஞ்சாப் மாநிலம் பதான் கோர்ட் பகுதியில் பாக்., மற்றொரு ஜெட் ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஏற்கனவே மூன்று விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், நான்காவது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
பாதுகாப்பு கருதி, குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகம் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் தாக்குதலையடுத்து பாகிஸ்தானில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நள்ளிரவு 1:00 மணியளவில், லாகூர் மீதும் நம் ராணுவம் தாக்குதல் தொடங்கியது. இதனால், பாக்., பீதியில் உறைந்துள்ளது.
-நமது நிருபர்-

