முதல்வர், அமைச்சர்களை 'மாண்புமிகு' அடைமொழியுடன் குறிப்பிட உத்தரவு
முதல்வர், அமைச்சர்களை 'மாண்புமிகு' அடைமொழியுடன் குறிப்பிட உத்தரவு
ADDED : செப் 11, 2025 04:57 AM

திருவனந்தபுரம்: 'பொதுமக்களின் புகார் மனுக்களுக்கு பதில் அளிக்கும் போது முதல்வர், அமைச்சர்களை, 'மாண்புமிகு' என்ற அடை மொழியுடன் அழைக்க வேண்டும்' என, அரசு அதிகாரிகளுக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு முதல்வர் கட்டுப்பாட்டில் மாநில நிர்வாக சீர்திருத்தத்துறை செயல் படுகிறது.
தற்போது நம் நாட்டில், பல்வேறு அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பின்போது முதல்வர், அமைச்சர்களை பாரம்பரியம் மற்றும் மரியாதையுடன் அழைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில் கேரள மாநில நிர்வாக சீர்திருத்தத்துறை கடந்த 30ல் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
கலெக்டர்கள், பல்துறை செயலர்கள், மற்றும் அலுவலக தலைமை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பொதுமக்களிடம் இருந்து வரும் அரசு தொடர்பான புகார்கள் மற்றும் மனுக்களுக்கு பதில் அளிக்கும் போது முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பெயர் முன், 'மாண்புமிகு' என்ற வார்த்தையை சேர்த்து பதில் அனுப்ப வேண்டும்.
இது தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்த அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இந்த அறிவுறுத்தலை கடைப்பிடிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு முதல்வரின் அறிவுரையை எதிரொலிப்பதாக கூறப் படுகிறது. எனினும், எதற்காக இந்த உத்தரவு வெளியிடப்பட்டது என்பதை அரசு தெரிவிக்கவில்லை. இந்த உத்தரவு சமூக ஊடகங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.