ADDED : பிப் 20, 2025 12:16 AM
சபரிமலை:சபரிமலை சன்னிதானத்தில், 18 படிகளில் ஏறிய பின், பக்தர்கள் சன்னிதானத்தில் சுற்றியுள்ள மேம்பாலத்தில் ஏற்றப்பட்டு, ஸ்ரீ கோவில் இடது பக்கம் மீண்டும் கீழே இறங்கி மூன்று வரிசைகளில் நின்று தரிசனம் செய்கின்றனர்.இதனால் காத்திருப்பும், சில வினாடி தரிசனமும் மட்டுமே கிடைக்கிறது.
இதற்கு மாற்றாக புதிய திட்டத்தின் படி, 18 படிகளில் ஏறியதும், கொடிமரம் மற்றும் பலி பீடத்தின் இரு பக்கங்கள் வழியாக பக்தர்களை பிரித்து, வரிசையில் அனுப்பப்படுவர்.
அவர்கள் ஸ்ரீ கோவில் முன் செல்லும் வரை அய்யப்பன் விக்ரகத்தை தரிசித்தபடி செல்லலாம்.
புதிய திட்டம் வாயிலாக, 15 மீட்டர் துாரம் நடந்து சென்றபடி சுவாமியை வணங்க முடியும். குறைந்தது 30 வினாடிகள் தரிசனம் கிடைக்கும். இரு வரிசைகளில் இடது பக்கம் சற்று உயரமாகவும், வலது பக்கம் தாழ்வாகவும் இருக்கும்.
நெரிசல் ஏற்பட வாய்ப்பில்லை. வடக்கு வாசல் வழியாக, இருமுடி இன்றி வரும் பக்தர்கள், ஏற்கனவே உள்ள முதல் வரிசையில் தரிசிக்க முடியும்.
பங்குனி பூஜைகளுக்காக நடை திறக்கப்படும் போது, மார்ச் 14-ல் முதல் ஆறு நாட்கள் இந்த திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

