இந்தியா- கனடா உறவில் பாதிப்பிற்கு ட்ரூடோ மட்டுமே பொறுப்பு; விளாசியது மத்திய வெளியுறவுத்துறை
இந்தியா- கனடா உறவில் பாதிப்பிற்கு ட்ரூடோ மட்டுமே பொறுப்பு; விளாசியது மத்திய வெளியுறவுத்துறை
UPDATED : அக் 17, 2024 10:36 AM
ADDED : அக் 17, 2024 09:14 AM

புதுடில்லி: இந்தியா- கனடா உறவில் ஏற்பட்ட பாதிப்பிற்கு, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மட்டுமே பொறுப்பு என மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்தது.
வட அமெரிக்க நாடான கனடாவில், காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்தாண்டு ஜூனில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இந்திய ஏஜன்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக, அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினார். இது இருநாட்டின் உறவில் விரிசலை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நிஜ்ஜார் கொலை வழக்கில், இந்திய உளவாளிகளின் பங்கை நிரூபிக்க வலுவான ஆதாரம் இல்லை என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒப்புக்கொண்டார். இதற்கு பதில் அளித்து சமூகவலைதளத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்று நாம் கேள்விப்பட்டவை, நாங்கள் தொடர்ந்து கூறி வருவதை உறுதிப்படுத்துகிறது.
கனடா பிரதமர் இந்தியாவுக்கு எதிராக வலுவான ஆதாரம் இல்லை என்பதை ஒப்புக்கொண்டார். இந்தியா- கனடா உறவில் ஏற்பட்ட பாதிப்பிற்கு, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மட்டுமே பொறுப்பு. இந்தியா மற்றும் இந்திய தூதர்களுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை கனடா கூறியது. ஆனால் கனடா எந்த ஆதாரத்தையும் எங்களிடம் முன்வைக்கவில்லை. இவ்வாறு மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

