ஆக்கிரமித்த நிலத்தை மீட்க வேண்டும்: பா.ஜ., தலைவர் ரமேஷ் வலியுறுத்தல்
ஆக்கிரமித்த நிலத்தை மீட்க வேண்டும்: பா.ஜ., தலைவர் ரமேஷ் வலியுறுத்தல்
ADDED : நவ 12, 2024 06:13 AM

பெங்களூரு: ''செல்வாக்குமிக்கவர்களின் உதவியுடன், நிலத்திருடர்கள் ஆக்கிரமித்துள்ள 280 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள நிலத்தை மீட்க வேண்டும்,'' என, பா.ஜ., தலைவர் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர், பி.டி.ஏ., கமிஷனர் ஆகியோருக்கு, அவர் எழுதிய கடிதம்:
பத்மநாபநகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, குமாரசாமி லே - அவுட்டில் உள்ள தயானந்த சாகர் கல்வி நிறுவனத்தை ஒட்டி, 280 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள 4.10 ஏக்கர் நிலம் உள்ளது.
பி.டி.ஏ.,வுக்கு சொந்தமான இந்த நிலத்தை, ஹரிகிருஷ்ணா என்பவர், தன் அரசியல் செல்வாக்கு மற்றும் பண பலத்தை பயன்படுத்தி, சர்வே எண் 52ல், ஒரு ஏக்கர் நிலத்துக்கு போலியான ஆவணங்கள் உருவாக்கி, 2016ல் மாநகராட்சி வருவாய் பிரிவில் பட்டா பெற்றுள்ளார்.
ஒரு ஏக்கர் நிலத்தை, போலியான ஆவணங்கள் மூலம் தன் பெயருக்கு பட்டா செய்து கொண்ட ஹரிகிருஷ்ணா, மொத்தம் 4.10 ஏக்கர் நிலத்துக்கு, வேலி போட்டுள்ளார். அரசு நிலத்தை மீட்க வந்த அதிகாரிகளுக்கு, ராஜேந்திர பிரசாத் என்ற அதிகாரி மிரட்டல் விடுத்ததும், வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது, வெளிச்சத்துக்கு வந்தவுடன், 2022ல் அன்றைய வருவாய்த்துறை அமைச்சர், அந்த நிலத்தின் சட்டவிரோத பட்டாவை ரத்து செய்து, நிலத்தை மீட்கும்படி பெங்களூரு மாநகராட்சிக்கு உத்தரவிட்டார்.
இதுகுறித்து கேள்வி எழுப்பி, ஹரிகிருஷ்ணா தாக்கல் செய்த வழக்கை, தள்ளுபடி செய்த நீதிமன்றம், நிலத்தை வசப்படுத்தும்படி மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டு 11 மாதங்கள் கடந்தும், பட்டாவை ரத்து செய்து 280 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள நிலத்தை மீட்க, மாநகராட்சி இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
பி.டி.ஏ., மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் செயல் சந்தேகத்துக்கு இடம் அளிக்கிறது. ஹரிகிருஷ்ணா வசம் உள்ள நிலத்தை மீட்க வேண்டும். நில ஆக்கிரமிப்பு முறைகேட்டில் தொடர்பு கொண்ட மாநகராட்சி அதிகாரிகள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கூறியுள்ளார்.

