இந்தியாவின் வளர்ச்சியில் பங்கேற்க இதுவே சரியான நேரம்: சர்வதேச தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
இந்தியாவின் வளர்ச்சியில் பங்கேற்க இதுவே சரியான நேரம்: சர்வதேச தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
ADDED : அக் 25, 2024 02:54 PM

புதுடில்லி: இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில் சர்வதேச தொழிலதிபர்கள் பங்கேற்பதற்கு இதுவே சரியான நேரம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
டில்லியில் துவங்கிய ஜெர்மானிய வணிகத்திற்கான இந்தியா - பசிபிக் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவின் வளர்ச்சி பாதையில் பங்கேற்பதற்கு இதுவே சரியான நேரம். ஜெர்மன் தொழில்நுட்பம் இந்திய திறமையுடன்இணையும் போது, உலகத்திற்கு சிறந்த எதிர்காலத்தை அளிக்கும். வணிகத்தை தாண்டி, இந்தியாவைப் பற்றி ஆராய நேரம் ஒதுக்கவில்லை என்றால், பல அற்புதமான விஷயங்களை நீங்கள் இழக்க வேண்டியிருக்கும். நீங்கள் திரும்பி செல்லும் போது, நீங்களும், உங்கள் குடும்பமும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
12 ஆண்டுக்கு பிறகு, இந்த மாநாடு இந்தியாவில் முதல்முறையாக நடக்கிறது. ஒரு புறம் சிஇஓ.,க்கள் மாநாடு நடக்கிறது. மறுபுறம் இரு நாடுகளின் கடற்படை பயிற்சி நடக்கிறது. இது இந்தியா ஜெர்மனி உறவு பலப்படுவதை காட்டுகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
சந்திப்பு
ஜெர்மனி அதிபர் ஓலப் ஸ்கால்ஜ் டில்லி வந்துள்ளார். அவர் டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: பாதுகாப்பு, தொழில்நுட்பம், எரிசக்தி, பசுமை ஆகிய துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு அதிகரித்து உள்ளது. இன்றைய உலகம், பதற்றம், குழப்பம் மற்றும் நிச்சயமற்ற தன்மை என்ற சகாப்தத்தில் நுழைகிறது. சட்டத்தின் ஆட்சி உள்ளிட்டவற்றில் தீவிர பிரச்னைகள் நிலவுகிறது. நமது பொருளாதார ஒத்துழைப்பு இன்னும் ஊக்கம் பெறும். பருவநிலை மாற்றத்திற்கான நமது உறுதிப்பாட்டுக்காக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீட்டை அதிகரித்து வருகிறோம். கல்வி, திறன் ஆகியவற்றில் இரு நாடுகள் இணைந்து பணியாற்றுகிறது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

