நம்பிக்கை ஓட்டெடுப்பில் நிதீஷ் அரசு வெற்றி: எதிர்க்கட்சி எம்எல்ஏ.,க்களும் ஆதரவு
நம்பிக்கை ஓட்டெடுப்பில் நிதீஷ் அரசு வெற்றி: எதிர்க்கட்சி எம்எல்ஏ.,க்களும் ஆதரவு
ADDED : பிப் 12, 2024 03:47 PM

பாட்னா : பீஹாரில் புதிதாக அமைந்துள்ள முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெற்றது. இதில் 5 எதிர்க்கட்சி எம்எல்ஏ.,க்களுடன் சேர்த்து பெரும்பான்மை எம்எல்ஏ.,க்கள் ஆதரவுடன் நிதீஷ் அரசு வெற்றி பெற்றது.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீஹார் முதல்வருமான நிதீஷ் குமார், சமீபத்தில் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடனான கூட்டணியை முறித்தார். அதன்பின், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைந்தார். இதையடுத்து, பீஹார் முதல்வராக ஒன்பதாவது முறையாக நிதீஷ் பதவியேற்ற நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்த சம்ரத் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.
இந்நிலையில், பீஹார் சட்டசபையில் இன்று (பிப்.,12) நிதீஷ் குமார் தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தியது. மொத்தம் 243 உறுப்பினர்களை கொண்ட பீஹார் சட்டசபையில், பெரும்பான்மைக்கு 122 எம்எல்ஏ.,க்கள் ஆதரவு தேவைப்படும் நிலையில், 129 பேர் நிதீஷ் அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்தனர். இதில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை சேர்ந்த 5 எம்எல்ஏ.,க்களும் நிதீஷ்க்கு ஆதரவாக ஓட்டளித்துள்ளனர். பெரும்பான்மை எம்எல்ஏ.,க்கள் ஆதரவளித்ததால் ஓட்டெடுப்பில் நிதீஷ் அரசு வெற்றி பெற்றது.

