UPDATED : பிப் 26, 2024 02:14 AM
ADDED : பிப் 25, 2024 12:05 AM

டில்லி, ஹரியானா, குஜராத், கோவா மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தொகுதி பங்கீடு பேசி முடித்துள்ளன. ஆம் ஆத்மி ஆட்சி செய்யும் பஞ்சாபில், இரு கட்சிகளும் மோதிப்பார்க்க முடிவு செய்துள்ளன.
லோக்சபா தேர்தல் அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்ற நிலையில், எதிர்க்கட்சிகளின் 'இண்டியா' கூட்டணியில், தொகுதி பங்கீடு பேரம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பழைய காலத்து நினைவுகளுடன் கெடுபிடியாக பேரம் பேசினால் பலன் இருக்காது என்பதை காங்கிரஸ் மேலிடம் புரிந்து கொண்டபின், இரு தரப்பு பேச்சுகளில் வேகம் தெரிகிறது.
4:3 விகிதம்
உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கொடுத்த 17 தொகுதிகளை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது. மீதமுள்ள 63 தொகுதிகளை, 'இண்டியா' கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுடன் சமாஜ்வாதி பகிர்ந்து கொள்ளும்.
அதை அடுத்து, ஆம் ஆத்மியுடன் காங்கிரஸ் நடத்திய பேரத்தில் நேற்று உடன்பாடு ஏற்பட்டது. டில்லியில் உள்ள ஏழு தொகுதிகளை 4:3 என்ற விகிதத்தில் இரு கட்சிகளும் பங்கிட்டுள்ளன. புதுடில்லி, மேற்கு டில்லி, தெற்கு டில்லி, கிழக்கு டில்லி ஆகியவை ஆம் ஆத்மிக்கு. சாந்தினி சவுக், வடகிழக்கு டில்லி, வடமேற்கு டில்லி ஆகியவற்றில் காங்கிரஸ் போட்டியிடும்.
ஹரியானாவில் உள்ள 10ல், ஒன்பது தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும். குருஷேத்ரா தொகுதி மட்டும் ஆம் ஆத்மிக்கு கிடைத்தது.
கோவாவில் உள்ள இரண்டு தொகுதிகளிலும், யூனியன் பிரதேசமான சண்டிகரிலும் காங்கிரஸ் போட்டியிடும்.
அஹமது படேல் தொகுதி
குஜராத்தின் 26 தொகுதிகளில் பாவ்நகர், பருச் ஆகிய இரண்டு மட்டும் ஆம் ஆத்மிக்கு. மற்ற தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும்.
அக்கட்சி விட்டுக் கொடுத்த பருச், மறைந்த காங்கிரஸ் தலைவர் அஹமது படேல் வென்ற தொகுதி. படேலின் வாரிசுகள் கண் வைத்திருந்த போதிலும், காங்கிரஸ் அதை ஆம் ஆத்மிக்கு ஒதுக்கியது எதிர்பாராதது.
'தற்போது நாடு உள்ள நிலையில், கட்சியைவிட நாட்டின் நலன் முக்கியம். அதனால், இரு தரப்பிலும் விட்டுக் கொடுத்து உடன்பாட்டுக்கு வந்திருக்கிறோம். நிர்வாகிகளும், தொண்டர்களும் புரிந்து கொண்டு பணியாற்றுவர்' என, இரு கட்சிகளின் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
உடன்பாட்டின்படி, இந்த மாநிலங்களில் உள்ள 46 தொகுதிகளில், ஆம் ஆத்மி ஏழு இடங்களில் போட்டியிட உள்ளது; 39 தொகுதிகளை காங்கிரஸ் பெற்றுள்ளது.
பஞ்சாபில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதை காங்கிரஸ் ஏற்கும் என அறிவித்துள்ளதால், அங்கு மட்டும் இரு கட்சிகளும் மோதிப்பார்க்கும் என தெரிகிறது. அது, மற்ற மாநிலங்களில் பிரசாரத்தை பாதிக்குமா என்பதை பார்க்க வேண்டும்.
நம்பிக்கை இழப்பு
புதுடில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா கூறுகையில், டில்லி சட்டசபையில் பெரும்பான்மை இருந்தும், காங்கிரசுடன் ஆம் ஆத்மி கூட்டணி அமைத்துள்ளது. மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டதை முதல்வர் கெஜ்ரிவால் உணர்ந்துள்ளார். அதனால், இந்த முடிவு எடுத்துள்ளார் என்றார்.

