'மருந்துகள் மீது புதிய லேபிள் கட்டாயமல்ல' பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க முடிவு
'மருந்துகள் மீது புதிய லேபிள் கட்டாயமல்ல' பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்க முடிவு
ADDED : செப் 14, 2025 01:10 AM

புதுடில்லி:ஜி.எஸ்.டி., குறைப்பால், மருந்துகள் மீது, புதிய விலைக்கான லேபிள் இடம்பெறச் செய்வது கட்டாயமல்ல என, தேசிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான என்.பி.பி.ஏ., தெரிவித்து உள்ளது.
ஜி.எஸ்.டி., சீர்திருத்தத்தின்படி, வரி அடுக்குகள் மாற்றம் மற்றும் வரி குறைப்பு ஆகியவை, வரும் 22ம் தேதி அமலுக்கு வரவுள்ளன.
வரி குறைக்கப்பட்ட பொருட்களுக்கு, விலையை குறைக்க, தயாரிப்பு நிறுவனங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. மருந்துகள் பெரும்பாலானவற்றுக்கு ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டுள்ளதால், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட மருந்து பட்டைகள், பாட்டில்களில் புதிய லேபிள் இடம்பெறச் செய்ய வே ண்டியுள்ளது.
ஆனால், இதற்கு போதிய அவகாசம் இல்லாமல், மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சூழலை தவிர்க்க, என்.பி.பி.ஏ., நடவடிக்கை எடுத்துள்ளது.
மருந்துகள் மீது விலை குறைப்பு லேபிள் இடம்பெறச் செய்யாவிட்டாலும், வினியோக தொடரில் விலை குறைக்கப்பட்டு மக்களுக்கு விற்பனை செய்தால் போதுமானது என்றும் மறு லேபிள் இடம்பெறச் செய்வது, வரும் 22ம் தேதிக்குள் கட்டாயமல்ல என்றும் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலாக, மருந்து வினியோகஸ்தர்களுக்கு தயாரிப்பு நிறுவனங்கள் விலை குறைப்பை வலியுறுத்தவும் சமூக வலைதளங்கள், அச்சு ஊடகங்களில் மாநில மொழிகளில் விளம்பரம் வெளியிட்டு நுகர்வோருக்கு விலை குறைப்பு பற்றி தெரிவிக்கவும் வலியுறுத்தியுள்ளது.
இதன் வாயிலாக, சந்தையில் அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ கருவிகளுக்கு பற்றாக்குறை ஏற்படுவது தடுக்கப்படும். மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறையின் வழிகாட்டுதலில், என்.பி.பி.ஏ., எடுத்துள்ள இந்த முடிவை மருந்து தயாரிப்பு துறை நிபுணர்கள் வரவேற்றுள்ளனர்.