ரூ. 5 லட்சம் கோடியில் உள்கட்டமைப்பு திட்டங்கள்: மத்திய அமைச்சர்
ரூ. 5 லட்சம் கோடியில் உள்கட்டமைப்பு திட்டங்கள்: மத்திய அமைச்சர்
ADDED : டிச 24, 2025 10:36 PM

புதுடில்லி: பிரதமர் மோடியின் 3வது ஆட்சி காலத்தில் 5 லட்சம் கோடி ரூபாய் அளவில் உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
டில்லியில் நிருபர்களிடம் அவர் ரயில்வே, விமான நிலையம், துறைமுகம் மற்றும் நெடுஞ்சாலை துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: பக்தோரா, பிடா, வாரணாசி மற்றும் கோடா ஆகிய பகுதிகளில் விமான நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்தப் பணிகள் 7,339 கோடி ரூபாயில் முதலீடு செய்யப்படும். இதன் மூலம் பிராந்திய அளவில் விமான இணைப்பு பலன் பெறும்.
துறைமுகத்துறையில், மஹாராஷ்டிராவின் தகானு பகுதியில் துறைமுகம் அமைக்கவும், அதனுடன் கப்பல் கட்டும் தளம் மற்றும் கடலோர பாதுகாப்பில் சீர்திருத்தங்களுக்கு ரூ.1,45,945 கோடி ஒதுக்கப்படும். நெடுஞ்சாலைத்துறையில் 1,97,644 கோடி ரூபாய் முதலீடு சய்யப்படுகிறது. இதில் 936 கி.மீ, தூரத்துக்கு 8 நெடுஞ்சாலை திட்டங்களை மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் எல்லைப்பகுதியில் உள்ள சாலை வசதியை மேம்படுத்தப்படும்.
பாட்னா - அராஹ் - சசாராம் வழித்தடம், ஜிராக்பூர் பைபாஸ் சாலை, ஷில்லாங் - சில்சார் வழித்தடம், ஒடிசா, பீஹார் அசாம் மற்றும் தமிழகத்தில் நான்கு மற்றும் ஆறுவழிச்சாலை திட்டங்களும் இதில் அடக்கம். ரயில்வேத்துறையில் 1,52,583 கோடியில் 5,869 கி.மீ., தூரத்துக்கு புதிய மற்றும் இரு வழிப்பாதைகள் 43 ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டங்களினால், போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், சரக்கு கொண்டு செல்லுதல் எளிதாகுவதுடன், பயணிகள் சேவை எளிதாகும். இந்த உள்கட்டமைப்பு திட்டங்கள் அனைத்தும் பிரதமர் மோடியின் 3வது ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் ஆகும். இது உலகதரத்திலான கட்டுமானத்திலும், வேலைவாய்ப்பை பெருக்கி பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதில் அரசுக்கு உள்ள நோக்கத்தை குறிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

