அசாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் 103ஐ கைப்பற்ற தே.ஜ., இலக்கு!: தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் வியூகம்
அசாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் 103ஐ கைப்பற்ற தே.ஜ., இலக்கு!: தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் வியூகம்
ADDED : ஜன 04, 2026 01:03 AM

அசாமில் வரும் ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், மொத்தமுள்ள 126 தொகுதிகளில், 103ஐ கைப்பற்ற ஆளும் பா.ஜ., கூட்டணி இலக்கு வைத்துள்ளது. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரசும் தேர்தல் வியூகங்களை வகுத்து வருவதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 126 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் ஏப்ரலில் தேர்தல் நடக்கிறது. கடந்த இரு தேர்தல்களில் வெற்றி பெற்ற பா.ஜ., மூன்றாவது வெற்றியையும் எதிர்பார்த்துள்ளது.
இந்த முறை ஆட்சி அதிகாரத்தை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்பதில், எதிர்க்கட்சி யான காங்கிரசும் மும்முரம் காட்டி வருகிறது.
பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில், அசாம் கண பரிஷத் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. காங்., கூட்டணியில் மார்க்சிஸ்ட், அசாம் ஜாதிய பரிஷத், ராய்ஜோர் தளம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஆளும் பா.ஜ., கூட்டணி தேர்தல் பணிகளை தற்போதே முடுக்கி விட்டுள்ளது.
மொத்தமுள்ள 126 இடங்களில், 103ஐ கைப்பற்ற ஆளும் கூட்டணி இலக்கு நிர்ணயித்துள்ளது.
பா.ஜ., ஆளும் மாநிலங்கள் பிரதமர் நரேந்திர மோடியின் பிரசாரத்தை மட்டுமே நம்பி இருக்கின்றன. ஆனால், இதில் அசாம் மட்டும் தனித்து நிற்கிறது. காரணம், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவும் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளார்.
மாதாந்திர நிதி உதவி
பா.ஜ.,வின் உண்மையான முகமாக அவர் அறியப்படுகிறார். இதை யாராலும் மறுக்க முடியாது.
வடகிழக்கு மாநிலங்கள் முழுதும் பா.ஜ.,வை நிலைநாட்டுவதில் உந்து சக்தியாக விளங்கும் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, வளர்ச்சி மற்றும் அடையாள அரசியல் ஆகிய இரண்டையும் பயன்படுத்தி வருகிறார்.
தேர்தலில் பெண் வாக்காளர்களை கவரும் வகையில், புத்தாண்டு பரிசாக, 'அருணோதய்' திட்டத்தின் கீழ், -38 லட்சம் பெண் பயனாளிகளுக்கு, சிறப்பு பிஹு மானியம் உட்பட, 8,000 ரூபாய் முன்பணம், பிப்., 20ல் வழங்கப்படும் என, அவர் அறிவித்துள்ளார்.
மேலும், 'பாபு அசோனி' என்ற திட்டத்தில், உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதாந்திர நிதி உதவி வழங்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.
வருமானத்தின் அடிப்படையில், முதுகலை மாணவர்களுக்கு மாதம் 2,000 ரூபாயும், இளங்கலை மாணவர்களுக்கு மாதம் 1,000 ரூபாயும் பிப்ரவரி முதல் வழங்கப்பட உள்ளது.
மத்திய அரசுக்கு இணையாக, எட்டாவது ஊதியக் குழுவை அமைப்பதாக முதன்முதலாக அசாம் அறிவித்துள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்களின் ஓட்டு வங்கியை பா.ஜ., உறுதிப்படுத்துகிறது.
தேர்தலை கருதியே இத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
தலைநகர் குவஹாத்தியில் இருந்து, 440 கி.மீ., தொலைவில் உள்ள திப்ருகர் மாவட்டத்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் அசாமின் இரண்டாவது தலைநகராக மாற்றவும் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா திட்டமிட்டுள்ளார்.
பல நலத்திட்டங்கள் மூலம் சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் கவர அவர் இலக்கு வைத்துள்ளார்.
ஊடுருவல், பசுவதை தடை, பூர்வீக மக்களின் நலன்களை பாதுகாப்பது போன்ற பிரச்னைகளை மையப்படுத்தி, தேர்தலில் பிரசாரத்தை மேற்கொள்ள ஆளும் பா.ஜ., கூட்டணி முடிவு செய்துள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., கூட்டணியில் இடம் பெற்ற ஐக்கிய மக்கள் கட்சி லிபரல், இந்த முறை தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
அதே சமயம், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் தொகுதிகளை குறிவைத்து களத்தில் குதித்துள்ளது. இவை பா.ஜ.,வுக்கு சவாலாக பார்க்கப்படுகிறது.
கலாசார சின்னம்
பா.ஜ.,வுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில், காங்., ஈடுபட்டுள்ளது. அக்கட்சியின் முகமாக, லோக்சபா எதிர்க்கட்சித் துணை தலைவர் கவுரவ் கோகோய் உருவெடுத்துள்ளார்.
அசாம் ஜாதிய தளம், மார்க்.கம்யூ., அசாம் ஜாதிய பரிஷத், ராய்ஜோர் தளம், இ.கம்யூ., உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள காங்., திட்டமிட்டுள்ளது. மொத்தமுள்ள 126 தொகுதிகளில், 100ல் போட்டியிட அக்கட்சி முடிவு செய்துள்ளது.
கடந்த தேர்தலில், காங்கிரசுடன் கூட்டணி வைத்த பத்ருதீன் அஜ்மல் தலைமையிலான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, இந்த முறை தனித்து களம் காண்கிறது. இக்கட்சி, ஹைதராபாத் எம்.பி., அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம்., உடன் கூட்டணி வைக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அசாமில், 2023-ல் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறை இந்த தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறு வரையறைக்குப் பின், முஸ்லிம்கள் அதிகம் வாழும் தொகுதிகளின் எண்ணிக்கை, 30-லிருந்து 22 -ஆக குறைந்துள்ளது. பார்பெட்டா மாவட்டத்தில் எட்டு தொகுதிகள் இருந்த நிலையில், தற்போது அவை ஆறாக குறைந்துள்ளன. இது, சிறுபான்மையின ஓட்டுகளை மையமாக வைத்திருக்கும் கட்சிகளுக்குச் சவாலாக அமையும்.
அசாமில் பா.ஜ., கடும் போட்டியை எதிர்கொண்டாலும், தனக்கு எதிரான எந்தவொரு பிரச்னையையும் எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
உதாரணமாக, அசாமிய பாடகர் ஜூபின் கார்க்கின் பாடல் பா.ஜ., எதிர்ப்புப் பாடலாகக் கருதப்பட்டது. 2019-ல் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்த பாடல் முக்கிய பங்காற்றியது.
செப்டம்பரில் சிங்கப்பூரில் கார்க் திடீரென இறந்த நிலையில், ஆளும் பா.ஜ., அரசு அவரை மாநிலத்தின் மாபெரும் கலாசார சின்னமாக முன்னிறுத்தியது.
இது அசாம் இளைஞர்களுடன் உணர்ச்சிப்பூர்வமாக அக்கட்சி இணைய உதவியது. இது வாக்காளர்களை தங்கள் பக்கம் ஈர்க்க உதவும் என, அக்கட்சி நம்புகிறது.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஆளும் பா.ஜ.,வும், எதிர்க்கட்சியான காங்கிரசும் அனைத்து தரப்பினரையும் கவர தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றன. இதில் யார் மகுடம் சூடப் போகின்றனர் என்பது மே மாதம் தெரிந்துவிடும்.
- நமது சிறப்பு நிருபர் -:

